கேரளத்தில் கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் ஒரு “விவசாயி” கைது..!!
கேரளத்தில் கர்ப்பிணி யானை உயிரிழந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு – மலப்புரம் எல்லையில் அம்பலபாரா எனும் இடத்தில் ஊருக்குள் புகுந்த கர்ப்பிணி யானையை விரட்ட அப்பகுதி மக்கள் அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்து உணவாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் யானை படுகாயமுற்று இறுதியில் உயிரிழந்தது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.இதையடுத்து, கர்ப்பிணி யானை ஒன்று உயிரிழந்தது தொடர்பாக ஒருவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயியான இவர் மலப்புரம் மாவட்டத்தில் அரிகோட் நகரைச் சேர்ந்தவர் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக அம்பலபாராவில் வசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.