தமிழக அரசுக்கு பாராட்டு – பிரதமருக்கு ஸ்டாலின் கண்டனம்…
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளான் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவிவருகிறது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தன்னெழுச்சியாக கிளர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழகத்திலும் தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. ஆனால், அ.தி.மு.க வேளான் மசோதாக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கொரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிகிச்சை, சுகாதார வசதி ஆகியவை குறித்து பாதிப்பு அதிகம் உள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதாக தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் கடந்த 64 நாட்களாக தினம்தோறும் 5,000 மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 9,000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இப்படியொரு சூழலில் தமிழகம் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க அரசை பிரதமர் பாராட்டியிருப்பது வேடிக்கையாக உள்ளது என அவர் தெரிவித்தார்.
கொரோனா பேரிடரில் தவியாய்த் தவிக்கும் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமர் மோடி குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம். வேளாண் மசோதாவை ஆதரித்ததற்காக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடி பாராட்டியிருப்பது விந்தையாகவும், வேதனையாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.