மானநஷ்ட ஈடு கேட்டு பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு : ஸ்டாலின் மருமகனின் மனு தள்ளுபடி..!!
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த மான நஷ்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய ஸ்டாலின் மருமகனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் அளித்த புகாரின் பேரில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கின் குற்றவாளிகளாக கருதப்படுபவர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் செயல்படுவதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தன்னை தொடர்படுத்தி பேசியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், நக்கீரன் கோபால் உள்ளிட்டோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி சபரீசன், நக்கீரன் கோபால், கலைஞர் டிவி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் மானநஷ்ட வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாகக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தது.