ஆறுமுறை தேசிய விருது வாங்கிய பாரதிராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்…!
தமிழ் சினிமா நாயகிகளை வயல்காட்டில் ஓடவிட்டு கிராமியத்தை தத்துரூபமாக படம்பிடித்துக் காட்டியவர் பாரதிராஜா. சின்னசாமியாக பிறந்து சுகாதாரத் துறை அதிகாரியாக பணியாற்றிய பாரதிராஜா சினிமா மீது இருந்த ஈர்ப்பால் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
முதல்படமான 16 வயதினிலே திரைப்படத்திலேயே தமிழ் சினிமா அதுவரை பின்பற்றிய எல்லா இலக்கணங்களையும் உடைத்து வெற்றிகண்டார். கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் என தொடர் வெற்றி திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சினார். பாரதிராஜா திரைவாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் முதல் மரியாதை. சிவாஜிகணேசனை அதுநாள் வரை யாரும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடுத்தர வயதை கடந்துவிட்ட ஒரு ஆணுக்கு வரும் காதலை படமாக்கி பலரின் மனங்களையும் தொட்டார்.
வயது வந்தோர் மட்டுமே கதாநாயகன் கதாநாயகியாக நடிக்க முடியும் என்ற காலகட்டத்தில் கார்த்திக், ராதா ஆகியோரை மிக இளம் வயதிலேயே பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து பாரதிராஜா இயக்கியிருந்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காதல் காவியங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. மதங்களை கடந்து காதலை பேசியிருந்த இந்தத் திரைப்படம் பாரதிராஜாவிற்கு இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பெரிய அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது.
பாரதிராஜாவின் பால்ய பருவ நண்பரான இளையராஜா, பாரதிராஜாவின் திரைப்பயணத்தில் மிக முக்கிய நபராக துணைநின்றார். பாரதிராஜாவின் வெற்றி திரைப்படங்களில் இளையராஜாவின் பங்கு அளப்பரியது. பின்னர் இவர்கள் இருவர் இடையே நடைபெற்ற மோதலும் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. நடிகராக வேண்டும் என்ற கனவோடு திரைத்துறைக்குள் நுழைந்த பாரதிராஜா ஈரநிலம் திரைப்படத்திலும், தற்பொழுது பாண்டியநாடு, குரங்கு பொம்மை ஆகிய திரைப்படங்களில் நடித்தும் மக்கள் மனதை வசீகரித்துள்ளார். இயக்குனர் சங்க பதவிகளிலும், தயாரிப்பாளர் சங்க பதவிகளிலும் முக்கிய பங்காற்றி வரும் பாரதிராஜா, பாக்கியராஜ், மணிவண்ணன், மனோபாலா என தமிழ் சினிமாவிற்கு பல இயக்குனர்களை உருவாக்கி வழங்கியுள்ளார்.
6 முறை தேசிய விருதுகளையும் இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ள பாரதிராஜா தமிழக அரசியலில் எம்ஜிஆர் காலத்திலிருந்தே தன் கருத்துக்களால் கவனம் ஈர்த்து வருகிறார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோரின் உதவியுடன் கட்சி துவங்கும் முயற்சியில் ஈடுபட்டதும், தமிழக-கர்நாடக இடையிலான காவிரி பிரச்சனையில் நெய்வேலியில் போராட்டம் நடத்தியதும் என பல சமயங்களில் பரபரப்பாக பேசப்பட்டு உள்ளார்.