அனுமதியின்றி நாய்களுக்கு உணவளித்தால் ரூ.4000 வரை அபராதம்…
சென்னை கிண்டியில் 246 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதியில்தான் ஐ.ஐ.டி. வளாகம் அமைந்துள்ளது. இங்கு புள்ளிமான், வெளிமான், குரங்கு, நரி, நல்லபாம்பு, மரநாய், கீரிப்பிள்ளை உள்ளிட்ட வன உயிரினங்கள் வசிக்கின்றன. இந்த ஐ.ஐ.டி. வளாகத்தில் உற்பத்தியாகும் கழிவுகளை முறையாக கையாளாத காரணத்தால் அக்குப்பைகளை வன உயிரினங்கள் உண்பதால் நாய்களால் வேட்டையாடப்பட்டு இறந்த சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 2019 ஆம் ஆண்டு ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவலில் மூன்று ஆண்டுகளில் ஐ.ஐ.டி வளாகத்தில் மொத்தமாக 338 வன உயிரினங்கள் இறந்துள்ளதாகவும், அதில் 265 புள்ளிமான்கள், 1 5 வெளிமான்கள், 58 குரங்குகள், 3 நரிகள், 2 மரநாய், 1 நல்லபாம்பு, 3 கீரிப்பிள்ளை என்றும் தெரிய வந்தது.
இந்த உயிரிழப்புகள் குறித்து 2017ஆம் ஆண்டு வன உயிரின ஆர்வலர் ஆண்டனி க்ளமெண்ட் ரூபின் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதில் குறிப்பாக குப்பைகளை முறையாக கையாள வேண்டும். மான்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும். சாலையில் வேகத்தடுப்புகள் வைக்க வேண்டும் உள்ளிட்டவையும் அடங்கும். இந்த உத்தரவுகள் சிலவற்றை ஐ.ஐ.டி. நிர்வாகம் பின்பற்றினாலும் மான்கள் இறப்பு தொடர்சியாக நிகழ்ந்த வண்ணமே இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐ.ஐ.டி. நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வனத்துறை ஆகிய துறைகளில் உள்ள மூன்று நிபுணர்களை கொண்ட குழுவை உருவாக்கி அந்த குழுவானது தொடர்ச்சியாக ஐ.ஐ.டி. வளாகத்தில் வன உயிரினங்கள் தொடர்பாக மாதாந்திர கூட்டம் நடத்தி கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது பசுமைத் தீர்ப்பாயம்.
இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில் சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் தனது வளாகத்திற்குள் இனிமேல் யாரும் நாய்களுக்கு உணவுகளை வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் 5 இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க தனியாக இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தினமும் 2 வேளைகள் வளாகத்திற்குள் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்கப்படும். அங்கு வந்து pedigree போன்ற உணவுகளை நாய்களுக்கு நேரில் வழங்கலாம் அல்லது அதற்கான பணத்தை நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். இந்த 5 இடங்களைத் தவிர பிற இடங்களில் நாய்களுக்கு உணவு வழங்கினால் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் இந்த இடங்கள் 14 இடங்களாக அதிகரிக்கப்பட்டது ஆனால் இதற்கு பின்னரும் அனுமதிக்கப்படாத இடங்களில் நாய்களுக்கு பலரும் உணவளித்து வந்ததால் விதிகளை கடுமையாக்கியுள்ளது ஐ.ஐ.டி. நிர்வாகம். அதன்படி உரிய அனுமதி அட்டை பெறாதவர்கள் நாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களை தவிர பிற இடங்களில் உணவளித்தால் முதல் முறை குற்றத்திற்கு 1000 ரூபாய் அபராதமும், எச்சரிக்கையும் விதிக்கப்படும். இரண்டாவது முறை தவறிழைத்தால் 2000 ரூபாய் அபராதமும் இறுதி எச்சரிக்கை விதிக்கப்படும்.மூன்றாவது முறை தவறிழைத்தால் 4000 ரூபாய் அபராதமும் விடுதியைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று புதிய விதிகளை ஐ.ஐ.டி. நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக நாய்கள் மான்களை வேட்டையாடுவது குறையும் என்று ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.