தமிழ்நாடு

மாநகராட்சியின் திட்டத்துக்கு ராமதாஸ் கண்டனம்…

சென்னை மாநகராட்சியில் மயிலாப்பூர், அம்பத்தூர், பள்ளிக்கரணை, கொடுங்கையூர், சாத்தாங்காடு, அயனாவரம் ஆகிய 6 இடங்களிலும், புறநகரில் தாம்பரத்தில் இரு இடங்கள், சிட்லப்பாக்கத்தில் ஓரிடம் என மொத்தம் 9 இடங்களில் குப்பை எரிஉலைகளை அமைக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, அவற்றுக்கான ஒப்பந்தப் புள்ளிகளையும் கோரியிருக்கிறது. மனித நலனுக்கு எதிரான இத்திட்டம் கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் அமைக்கப்படவுள்ள 9 எரிஉலைகளிலும் தலா 100 டன்கள் வீதம் தினமும் 900 டன்கள் குப்பைகள் எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படவிருக்கிறது. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் என்ற புரட்சிகரமான தலைப்புடன் இத்திட்டம் முன்வைக்கப்படும் போதிலும், இத்திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் மிக மிகக் குறைவு ஆகும். அதேநேரத்தில் இதனால் ஏற்படும் பாதிப்புகள் அளவிட முடியாததாகும். பொருளாதார அடிப்படையிலும் இது தோல்வித் திட்டமாகும்.

ஒட்டுமொத்த உலகிலும் இன்று ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பெரும் தீமைகளுக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பது புவி வெப்பமயமாதல் தான். புவி வெப்பமயமாதலுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று குப்பையை எரிப்பது ஆகும். அனல் மின்னுற்பத்தி நிலையங்களால் தான் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், அனல் மின்நிலையங்களை விட மோசமான பாதிப்புகளை எரிஉலைகள் ஏற்படுத்துகின்றன. நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு டையாக்சின், 3 மடங்கு நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு பாதரசம், 6 மடங்கு சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு கரியமிலவாயு ஆகிய மாசுக்களை எரிஉலை மின்னுற்பத்தி நிலையங்கள் வெளியிடுகின்றன.

எந்த நன்மையும் செய்யாத, காற்று மாசு, உடல்நலக் கேடு, புவிவெப்பமயமாதலுக்குக் காரணமான வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு என பல கேடுகளுக்கு வழிவகுக்கும் குப்பை எரிஉலைகளை சென்னையில் அமைப்பது தற்கொலைக்கு சமமான முடிவு ஆகும். எனவே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 9 குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அத்துடன், மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 உள்ளிட்ட குப்பை மேலாண்மைக்கான விதிகளை முழுமையாக பின்பற்றி குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பூஜ்ய குப்பை எனப்படும் குப்பையில்லா மாநகர கோட்பாட்டை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.