“வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறுவது ஒரு மோசடி” – முதலமைச்சர் நிதிஷ்குமார்
பீகார் மாநிலத்தில் பத்து லட்சம் வேலைவாய்ப்புகளை தேஜஸ்வி யாதவ் உருவாக்குவதாக கூறுவது ஒரு மோசடி என முதலமைச்சர் நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார். பீகார் மாநில சட்டமன்றத்திற்கு நவம்பர் 3 மற்றும் 7-ம் தேதிகளில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். பர்பாத்தா மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார், 10,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக தேஜஸ்வி யாதவ் கூறிவருவது ஒரு மோசடி என சாடினார். இதுபோன்ற போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை குழப்ப முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஐக்கிய ஜனதா தள கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியில் 6,00,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், லாலுவின் 15 ஆண்டுகால ஆட்சியில் வெறும் 95,000 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டதாகவும் நிதிஷ்குமார் குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், 15 ஆண்டுகாலத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்துறையை நிதிஷ்குமார் அரசு நாசப்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதனிடையே பெகுசராயில் பரப்புரை மேற்கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, லாலுவின் ஆட்சியில் நிலவிய மின்வெட்டு காலங்களை சீரமைத்து, LED காலத்தை நோக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணி பயணித்து வருவதாக குறிப்பிட்டு வாக்கு சேகரித்தார்.