முடி நரைப்பது இதய நோய்க்கான அறிகுறியா…?
இளநரை சகஜம்தானே என அசால்டாக இருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆய்வு முடிவுகள் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், இதய பாதிப்புகளின் அறிகுறிப் பட்டியலில் இளவயதில் ஏற்படும் நரையும் முக்கிய அறிகுறி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்புக்கு காரணங்களாக இருக்கும் நோய்களில் இதய நோய் முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கரோனரி இதய நோய் இன்று பலரையும் தாக்குகிறது. கரோனரி தமனிகள் சேதமடைந்து. உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துகள் சரிவர சென்று சேர்வதில்லை. இதனால் ஆக்ஸிஜனும் குறைவாகக் கிடைக்கிறது. இதன் காரணமாகவே இதய நோய் உண்டாகிறது. இதன் அறிகுறியாக இளநரையும் ஒரு காரணமாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் 40 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு வழுக்கை மற்றும் இளநரை இருந்தால் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஐரோப்பிய சொசைட்டி ஆஃப் கார்டியாலஜி நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன், இந்திய ஆய்வாளர்கள் வழுக்கை மற்றும் இளநரை ஆகியவை இளைஞர்களில் இதய நோய்களுக்கு அதிக தொடர்பு உள்ளது எனக் கண்டறிந்தனர். ஐரோப்பிய இருதயவியல் சங்கம் நடத்திய ஆய்வில் 42 முதல் 64 வரையிலான 545 ஆண்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. அவர்களை நரை முடியின் அளவை வைத்து மூன்று குழுக்களாகப் பிரித்துள்ளது. அதாவது கருப்பு , வெள்ளை, சாம்பல் என மூன்று வகைகளாகப் பிரித்தனர். அதில் ஆச்சரியமான விஷயம் இதய பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்ட 80% ஆண்களுக்கு அதிக நரை முடி இருந்துள்ளது.
எனவே இளநரை என்றதும் அதை அலட்சியமாக இல்லாமல் கவனம் செலுத்துவது நல்லது. இதய நோய் என்பது நெஞ்சு வலி போன்ற அறிகுறிகளால் மட்டும் தென்படாது இப்படியும் வரலாம். எனவே இதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள் என்கின்றனர் வல்லுநர்கள். இளநரை மட்டுமன்றி இதய நோயின் அறிகுறிகளாக மார்பு பகுதியில் அசௌகரியம்,மூச்சு திணறல், ஒழுங்கற்ற இதய துடிப்பு, குமட்டல், அஜீரணம், நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று வலி, மயக்கம் அல்லது லேசான தலைவலி,சோர்வு, அதிகப்படியான வியர்வை, குறட்டை, தொண்டை அல்லது தாடை வலி, நீங்கா இருமல் ,உடலின் இடது பக்கத்தில் வலி, கால்கள் மற்றும் கணுக்கால் வீக்கம், முடி கொட்டுதல் போன்றவை இருக்கும். இந்த இளநரைக்கு இதய நோய் ஒருபுறம் காரணமாக இருந்தாலும் அது தவிர, மன அழுத்த,மரபியல் , தைராய்டு ,வைட்டமின் பி 12 குறைபாடு, புகைப்பிடித்தல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவையும் காரணங்களாக இருக்கலாம்.