கேரள மாநிலம் நிலச்சரிவில் 14 பேரை இழந்த இளைஞர்…!
கேரளாவின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் இடைவிடாத மழையானது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டம் பெரும்பாலும் மலைப்பகுதி என்பதால் கடந்த வியாழக்கிழமை 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முற்றிலுமாக சேதமடைந்து மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என்று அச்சப்படுகிறது. அந்த குடியிருப்புகளில் இருந்த 80 பேர் வரை மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. 43 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகின்றன.
இப்பகுதியில் பணியாற்றிய அனைவரும் தமிழகத்தின் தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தினை சேர்ந்தவர்கள். அதிலும் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் பாரதிநகரைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். இந்த நிலச்சரிவில் சண்முகையா என்பவரது குடும்பத்தினை சேர்ந்த 14 பேர் உயிரிழந்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடைய மனைவி மட்டும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சண்முகையாவின் மகன் விஜய் கயத்தாறில் இருந்த காரணத்தினால் அவரும் உயிர் தப்பியுள்ளார். 16 பேர் கொண்ட குடும்பத்தில் 2 பேர் மட்டுமே தற்பொழுது உயிரோடு இருக்கின்றனர். சண்முகையாவிற்கு 2 மனைவிகள், அதில் ஒருவர் மட்டும் இப்போது உயிரோடு உள்ளார். நிலச்சரிவு விபத்தில் சண்முகையா, அவரது ஒரு மனைவி, 3 மகள்கள், 3 மருமகன்கள், 6 பேரன், பேத்திகள் 14 பேரும் நிலச்சரிவில் இழந்து விட்டு கயத்தாரில் தனிமரமாக நிற்கிறார் விஜய்.