இது என்ன புது ட்விஸ்ட்?-தவிக்கும் ராஜஸ்தான் அரசியல்!
அரசியல் நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் ராஜஸ்தான் அரசியலில் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மீது பரபரப்பு குற்றச்சாட்டு.ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தினார். தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சேர்ந்து கொண்டு ஆளும் அரசை மைனாரிட்டி என்று விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டி தனக்கு 102 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக அசோக் கெலாட் பலத்தைக் காட்டினார். அப்போது சச்சின் பைலட்டிற்கு எதிராக எம்.எல்.ஏக்கள் கொந்தளித்ததால் துணை முதலமைச்சர், மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.மேலும் சட்டமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்காததால் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சச்சின் பைலட் உள்ளிட்ட 20 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் ஆளும் காங்கிரஸ் கட்சி கொறடா மனு அளித்தார். இதற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு சச்சின் பைலட் தரப்பிற்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ பிரித்விராஜ் மீனா ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை நாடினார். இதன் விசாரணையில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கை இன்று(ஜூலை 17) ஒத்திவைத்தனர். இந்நிலையில் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியின் ஹனுமன் பெனிவால் முன்னாள் பாஜக முதலமைச்சர் வசுந்தரா ராஜே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.அதாவது ஆளும் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் அரசு கவிழாமல் இருக்க வசுந்தரா ராஜே மறைமுகமாக உதவி செய்து கொண்டிருக்கிறார். இதற்காக அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் பேசி சமாதானம் செய்ய முயற்சித்து வருகிறார். காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும், முன்னாள் பாஜக முதலமைச்சர் வசுந்தரா ராஜேவிற்கும் இடையே ரகசிய புரிந்துணர்வு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு மூத்த பாஜக தலைவரும், இருமுறை ராஜஸ்தான் முதலமைச்சருமான வசுந்தரா ராஜே எந்தவொரு பதிலும் தெரிவிக்கவில்லை. முன்னதாக பாஜகவில் இருந்த பெனிவால் தனியாக பிரிந்து வந்து ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியை தொடங்கியுள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேசிய ஜனநாயக் கூட்டணியின் குரலாக மத்தியில் ஒலித்துக் கொண்டிருக்கிறார்.