தேடி சென்று வீடுகளை மீட்டு கொடுத்த அதிகாரி..!! இன்ப அதிர்ச்சியில் உறைந்த 19 குடும்பங்கள்…நெகிழவைத்த சம்பவம் ..!!
தகராறு ஒன்றில் அடித்து விரட்டப்பட்டு நாடோடிகளாக அலைந்து திரிந்த குடும்பங்களை போலீசார் மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த ஒரே சமுதாய மக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியுள்ளது. இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்களின் 13 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு, பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டன. இதனை அடுத்து உயிர் பயம் காரணமாக 23 குடும்பங்கள், தங்களது உடைமைகளை அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதனை அடுத்து அவர்கள் தங்களது உறவினர்கள் வீடுகளில் தங்கிக்கொண்டு காவல்துறைக்கு, வருவாய்துறைக்கு நியாயம் கேட்டு அலைந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சோர்ந்து போன அவர்கள் சென்னை, கேரளா, விழுப்புரம் என பல்வேறு ஊர்களுக்கு பிழைப்பு தேடி சென்றுவிட்டனர். இதில் பண்ருட்டி நகராட்சியில் வேலை பார்க்கும் ரமேஷ் என்பவர் உட்பட 5 குடும்பங்கள் மட்டும் பண்ருட்டி நகரிலேயே வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.
இந்த நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமாக அம்பேத்கர் நகருக்கு சென்ற பண்ருட்டி காவல் ஆய்வாளர் அம்பேத்கர், அப்பகுதியில் சிதைந்து கிடந்த வீடுகளை பார்த்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்களை கேட்டு தெரிந்துள்ளார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து தங்களுக்கு வீடுகளுக்கு திரும்ப ஆசையாக இருப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து வட்டாட்சியர் உதயக்குமார் தலைமையில் இரு தரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெளியூர்களில் இருப்பவர்களை தவிர 19 குடும்பங்களை அழைத்துக்கொண்டு அம்பேத்கர் நகருக்கு சென்றுள்ளார். அப்போது தான் வாங்கிச் சென்ற இனிப்புகளை எதிர் தரப்பினரிடம் கொடுத்து அவர்களை வரவேற்க செய்தார்.
தங்களது சொந்த வீடுகளுக்கு சென்றதும் பெண்கள் ஆனந்த கண்ணீரில் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தன. ஒரு சிலர் தெருவில் விழுந்து வீட்டை வணங்கி உள்ளே சென்றனர். முற்றிலும் பாழடைந்த நிலையில் உள்ள வீடுகளில் உடனடியாக வசிக்க முடியாது என்பதால் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என வட்டாட்சிரிடமு, காவல் ஆய்வாளரிடமும் மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து தங்களால் இயன்ற உதவிகளை செய்வதாக இருவரும் உத்தரவாதம் அளித்தனர்.
இதுகுறித்து தெரிவித்த ரமேஷ், ‘சொந்த வீட்டை விட்டு நாடோடி மாதிரி பல ஊர்களுக்கு அலைஞ்சது வேதனையாக இருந்தது. பல தடவை இந்த வழியாக வந்தாலும், அம்பேத்கர் நகருக்குள் நுழைய முடியவில்லையே என வேதனையாக இருக்கும். வெளியே நின்னு ஏக்கமாக பாத்துட்டு போவேன். இதுக்கு இன்ஸ்பெக்டர் சார் தான் ஒரு முடிவு பண்ணிருக்காரு. உயிர் உள்ளவரை அவரை மறக்க மாட்டோம். காலத்துக்கும் அவருக்கு நன்றி சொல்லுவோம்’ என உருக்கமாக தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.