சரக்கு வாகனங்களில் கூடுதல் பாரம் ஏற்றிச் செல்ல அனுமதி வேண்டுமென லாரி உரிமையாளர்கள் கோரிக்கை.
மத்திய அரசின் அனுமதிப்படி, தமிழகத்தில் இயக்கப்படும் சரக்கு வாகனங்களில் கூடுதல் பாரம் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டுமென லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், ”தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மணல் வழங்க 90 ஆயிரம் லாரி உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், வாரத்துக்கு சுமார் 400 முதல் 1000 லோடுகள் தான் வழங்கப்படுகிறது. எனவே, போதிய அளவில் மணல் கிடைக்கும் வகையில் கூடுதலாக 10 குவாரிகளை திறக்க வேண்டும். சரக்கு வாகனங்களில் 3 டன் அளவுக்கு அதிக பாரம் ஏற்றிச் செல்ல மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள சரக்கு லாரிகளிலும் கூடுதல் பாரம் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
குறிப்பாக, மணல் லாரிகளில் 2 யூனிட்டுக்கு பதிலாக இரண்டரை யூனிட்களாகவும், 3 யூனிட்டுக்கு பதிலாக 4 யூனிட் மணல் ஏற்றிச் செல்ல தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.” என்றார்.