இயற்கை

திருவாதிரை நட்சத்திர நேயர்களே !! ||or|| வெடித்து சிதற காத்திருக்கும் திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரம் சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயராக இருக்கும். பலர் இந்த நட்சத்திரத்தில் பிறந்ததாகவும் சோதிடம் சொல்லும். அந்த திருவாதிரை நட்சத்திரம் மரணப் படுக்கையில் இருப்பதாக கடந்த சில நாள்களாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

விண்வெளியில் பல்லாயிரம் கோடி விண்மீன்கள் உள்ளன. நம் சூரியனும் ஒரு விண்மீன்தான். ஒவ்வொரு விண்மீனும் ஒரு சூரியன்தான். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கோள் மண்டலங்கள் இருக்கக்கூடும். மனிதர்களுக்கு இருப்பதைப் போல விண்மீன்களுக்கும், குழந்தைப் பருவம், வளர்ச்சி, முதுமை ஆகியவை உண்டு.

அளவில் மிகவும் பெரியதாக உள்ள விண்மீன்கள் அதன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் ஊதிப் பெருத்து கடைசியில் வெடித்துச் சிதறும் நிகழ்ச்சிப் போக்கை ‘சூப்பர் நோவா’ என்பார்கள். இப்படி ஊதிப் பெருக்கும்போது அந்த விண்மீனின் பிரகாசம் மங்கும்.

இப்போது எதிர்பார்த்தைவிட விரைவாக சூப்பர் நோவா ஆகும் அறிகுறிகள் தெரிவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். விரைவாக திருவாதிரை தமது பிரகாசத்தை இழந்து, வீங்கிப் பெருத்துவருவதே இதற்குக் காரணம்.

ஓராண்டாக பிரகாசம் குறையும் நிலை

“பூமியில் இருந்து பார்க்கும்போது மிகப் பிரகாசமாகத் தெரியும் விண்மீன்களைப் பட்டியலிடும்போது, மிகப் பிரகாசமாக முதலிடத்தில் இருப்பது சிரியஸ் என்ற விண்மீன். இந்தப் பட்டியலில்  10வது இடத்தில் இருந்து வந்தது திருவாதிரை. ஆனால், சுமார் ஓராண்டாகவே இந்த பிரகாசம் மங்கத் தொடங்கி இப்போது 24 வது இடத்துக்கு சென்றுள்ளது இந்த விண்மீன்.

இது எவ்வளவு பெரிய நட்சத்திரம்

“சுருங்கி விரியும் தன்மையுடைய திருவாதிரையின் ஆரம், சூரியனுடைய ஆரத்தைப் போல 550 முதல் 920 மடங்கு பெரியது. அளவு என்றால் சூரியனைப் போல அது 20 கோடி மடங்கு பெரியது. சூரியனைப் போல 15 மடங்கு அதிக நிறையுடையது. சூரியனைப் போல 5 ஆயிரம் மடங்கு அதிக ஆற்றலை வெளியிடக்கூடியது” என்றார் வெங்கடேஸ்வரன்.

வெடிப்பதை பகலில் கூட பார்க்கலாம்

சூப்பர் நோவா போன்ற ஒரு வெடிப்பு இப்போது நடக்குமானால், அப்போது திருவாதிரை நட்சத்திரம் பலகோடி சூரியன்களின் ஆற்றலை வெளிப்படுத்தும். இந்த வின்மீன் நிலவின் அளவுக்கு வானத்தில் பெரிதாவதை பூமியில் இருந்து வெறும் கண்ணால் பார்க்கலாம் என்பது மட்டுமல்ல, அதனைப் பகலில் கூட பார்க்கலாம்.

 பூமிக்கு ஆபத்து இருக்கிறதா ?

சூப்பர் நோவா எனப்படும் இந்த வெடிப்பு நிகழ்வு மூன்று கட்டங்களில் நடக்கும். இது ஒருவேளை 50 ஒளியாண்டு தூரத்தில் நடக்குமானால், பூமியில் உயிர்கள் அழியும். புவியை அடையும் எக்ஸ் ரே கதிர்களின் கதிரியக்க அளவு ஹிரோஷிமா, நாகசாகியில் நடந்த அணுகுண்டு தாக்குதலைப் போல இருக்கும். ஆனால், 724 ஒளியாண்டு தூரத்தில் நடப்பதால் புவிக்குப் பாதிப்பு ஏதும் இருக்காது.

 திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  ஏதேனும் ஆகுமா ?

இப்போது ஒரு வேளை திருவாதிரை வெடித்து சூப்பர் நோவா ஆகும் நிகழ்வை, அது நிலவின் அளவுக்கு விண்ணில் ஒளிர்வதை நாம் பார்க்க நேர்ந்தால், அந்த நிகழ்வு 724 ஆண்டுகளுக்கு முன்பே நடந்துவிட்டது என்று பொருள். ஏனெனில், அந்த நிகழ்வின் ஒளி புவியை வந்தடைய இத்தனை காலம் ஆகும். குறிப்பிட்ட ஒருவர் பிறப்பதற்கு 724 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இவரை எப்படிப் பாதிக்கும்?

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.