வீதிகளுக்கு வந்த வண்ணமீன் விற்பனை..
காரணம் வழக்கமாக கடைகளுக்குள் விற்கப்படும் வண்ணமீன்கள் இன்று வீதிக்கு வந்துள்ளன. இங்குள்ள மரத்தின் அடியில் நீர் தொட்டிகளில் இவை நீந்துகின்றன. இதனை பலரும் ஆர்வத்துடன் பார்ப்பதுடன் வாங்கியும் செல்கின்றனர். ஏற்கனவே வண்ண மீன்கள் வளர்ப்பவர்கள் உடனடியாக வாங்கி செல்வதற்கு ஏதுவாக பாக்கெட்டுகளில் ரெடிமேடாக மீன்கள் போடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு ஜோடி 10 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை இங்கு விற்கப்படுகிறது. கப்பீஸ், ரெட் மொலி, பிளாக் மோலி, பைட்டர்,கோல்ட்மின், டெலஸ்கோப் மீன், ப்ளூ கோல்டு ஆகியவை இங்கு விற்கப்படுகின்றன. புதுச்சேரியில் வழக்கமாக கடைக்குள் குளிர்சாதன வசதியுடன் வண்ண விளக்குகளின் கீழ் விற்கப்படும் மீன்கள்,கொரோனாவால் வீதிக்கே வந்து விட்டன.
சென்னையில் கலர் மீன் பண்ணை வைத்துள்ள சபரிக்கு புதுச்சேரி குருசுகுப்பத்தில் வீடு. ஊரடங்கால் சென்னைக்கு அடிக்கடி செல்ல முடியாததால் புதுச்சேரியில் மொத்த விலைக்கே மீன் மற்றும் கண்ணாடி தொட்டிகளை குறைந்த விலைக்கு விற்கிறார். தங்களது பொருட்களை விற்பதற்கும் வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்ளவும் புதுபுது யோசனைகளை மக்களுக்கு கொரோனா கற்று தருகிறது என்பதில் ஐயமில்லை.