மீண்டும் ஒரு ”சுர்ஜித்தா”?120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் 3 வயது சிறுவன் சாய் வர்தன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சம்பவத்தில், 2 நாட்கள் போராடியும் அந்த சிறுவனை உயிரோடு மீட்க முடியவில்லை.
தெலுங்கானாவின் பப்பன்னாபேட் மண்டல் என்று பகுதியை சேர்ந்தவர், சாய் வர்தனின் தந்தை கோவர்தன் விவசாயி. இவர் தனது வீட்டின் பின் பக்கத்தில் விவசாய தேவைக்காக ஆழ்துளை கிணறை தோண்டி இருக்கிறார். நேற்று மாலை 4.30 மணிக்கு சிறுவன் எதிர்பாராத விதமாக அதற்குள் விழுந்துள்ளார்.இதுகுறித்து உடனடியாக மீட்பு படையினருக்கு கோவர்த்தன் தகவல் கொடுத்துள்ளார். தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். இன்று அதிகாலை 2வது நாளாக மீட்பு பணிகள் நடந்து வந்தன. மாநில பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்பு பணிகளை செய்து வந்தனர்.
சிறுவன் விழுந்த கிணறு, 120 அடி திறந்த போர்வெல் ஆகும். உள்ளே, ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருவதாகவும், பூமி தோண்டும் இயந்திரங்கள் வரவைக்கப்பட்டு, அந்த பணிகள் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.ஆனால் இன்று அதிகாலை 4 மணியளவில் சாய்வர்த்தன் உடல், சடலமாக மீட்கப்பட்டுள்ளது. “நாங்கள் அவரை உயிரோடு மீட்க போராடினோம். ஆனால் சாய் வர்த்தனை மீட்கும் சிறிது நேரத்திற்கு முன்பு அவர் இறந்துவிட்டார் என்று தெரிகிறது. அவருக்கு தேவையான ஆக்ஸிஜன் சப்ளை போகவில்லை என்று தெரிகிறது. களிமண் மூடியதால், அந்த சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டிருக்க கூடும் என்று தெரிகிறது” என்று மேடக் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தனா தீப்தி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற சிறுவன் கடந்த வருடம் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து நான்கு நாட்களாக மீட்பு பணி நடந்தும் கடைசியில் சுஜித் சடலமாக மீட்கப்பட்டார். சுஜித் சம்பவத்திற்கு பிறகும், மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல், போர்வெல் கிணறுகளை, திறந்து வைப்பது அதிர்ச்சியளிக்கிறது.