நேற்று ட்விட்டரில் ட்ரெண்டான #BOYCOTTNETFLIX… ‘பரபரப்பு’ சம்பவத்திற்கு பின்னாலுள்ள ‘காரணம்’ என்ன தெரியுமா??
நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற OTT தளங்கள் மூலம் அடிக்கடி பல திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்கள், திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஆன்லைனில் வெளியாவதுண்டு.
அதுவும் இந்த கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் தங்களது பொழுதினை அதிக நேரம் ஆன்லைன் தளங்களில் கழித்து வருகின்றனர். அதுவும் இப்படி வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களுக்கு தணிக்கை இல்லை என்பதால் எப்படி வெளிப்படையாக வேண்டுமானாலும் காட்சிகள் மற்றும் வசனங்களை வைக்க முடியும்.
இதனால், நெட்ப்ளிக்ஸ் போன்ற தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மதம், சமுதாயம் போன்ற விஷயங்களை தவறாக சித்தரிப்பதாக கூறி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. இந்நிலையில், தற்போது ட்விட்டரில் #BoycottNetflix என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இதற்கு காரணம், ‘A Suitable Boy’ என்ற பெயரில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான தொடர் தான். இந்த தொடரில் வரும் நாயகன் கதாபாத்திரம் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவராகவும், நாயகி கதாபாத்திரம் இந்து மதத்தை சேர்ந்தவராகவும் கதை சித்தரிக்கபட்டுள்ளது. இதில், இருவரும் இணைந்து கோவிலில் வைத்து முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ஒரு இந்து கோவிலில் இந்த காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளதால் பலர் இந்த தொடருக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்து மதத்தை அவமதிப்பது போல உள்ளதாகவும், இந்த தொடர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பலர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பாஜக கட்சியை சேர்ந்த சிலரும் இந்த காட்சிக்கு கண்டனங்களை தெரிவித்தனர். அது மட்டுமில்லாமல் அந்த வெப் சீரியஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, தனிஷ்க் நகைக்கடை விளம்பரத்தில், இந்து மத கர்ப்பிணி பெண்ணிற்கு அவரது இஸ்லாமிய மாமியார் வளைகாப்பு நடத்துவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அதற்கும் இதே போன்று கடுமையான எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.