டீக்கடை உரிமையாளர் மீது ₹ 50 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாக எழுதிய வங்கி..!
கொரோனா ஊரடங்கால் சிறு தொழில்கள் தொடங்கி, மிகப்பெரிய நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன. சேமிப்பு எதுவும் இல்லாத சிறிய தொழில் நடத்துபவர்கள், வங்கிக்கடனையே நம்பி உள்ளனர். அந்த நம்பிக்கையில், வங்கிக்கு கடன் கேட்டு சென்ற டீக்கடைக்காரரிடம் ஏற்கனவே வாங்கிய 50 கோடி ரூபாயை கட்டுங்கள் என்று அதிகாரிகள் கூறிய சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.
ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் டீக்கடை நடத்தும் ராஜ்குமார் என்பவர், குறைந்த தொகையை கடனாக வழங்கக் கோரி, அங்குள்ள வங்கிக்கு சென்றுள்ளார். அவரின் விண்ணப்பத்தை பரிசீலித்த அதிகாரிகள், ”ஏற்கனவே வாங்கியுள்ள 50 கோடி நிலுவையில் உள்ள நிலையில், இந்த கடனை எப்படி கட்டுவீர்கள்…?” என்று கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டீக்கடைக்காரர் ராஜ்குமார், என்னை நம்பி எப்படி 50 கோடி கடன் கொடுக்க முடியும். தனது பெயரில் யாரோ கடன் வாங்கியிருப்பதாகவும், தான் எந்த கடனையும் வாங்கவில்லை என்றும் வேதனையுடன் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.