டட்ஸன் இந்தியாவின் BS-6 கார்.. டீசர் வெளியீடு!!
தனது இணையதளத்தில், ரெடி-கோ BS-6 காரின் டீசர் படங்களை வெளியிட்டிருக்கிறது டட்ஸன் இந்தியா. வரும் நாள்களில் இந்த பட்ஜெட் ஹேட்ச்பேக் ஆன்லைனிலேயே அறிமுகமாவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. டீசர்களைப் பார்க்கும்போது, ரெடி-கோ எப்படி மாறியிருக்கிறது என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.
மெலிதான மற்றும் ஷார்ப்பான ஹெட்லைட்ஸ், நிஸான் கிக்ஸை நினைவுபடுத்துகிறது. அகலமான Octagon வடிவ கிரில்லைச் சுற்றியிருக்கும் க்ரோம் வேலைப்பாடு நைஸ். இதற்கு மேட்சிங்காக, Air Dam-க்கும் க்ரோம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தைய BS-4 மாடலில் சிறிய DRL Strip ஆப்ஷனலாக இருந்த நிலையில், BS-6 வெர்ஷனில் அது L வடிவத்தில் பெரிதாகியுள்ளது. பனி விளக்குகளுக்கு மாற்றாக இருக்கும் இது, தற்போது ஸ்டாண்டர்டு அம்சமாக இருக்கலாம்.இப்படி மொத்தமாகக் காரின் முன்பக்கம், ஃபேஸ்லிஃப்ட் என்பதை உணர்த்தும்படி காட்சியளிக்கிறது. கோ மற்றும் கோ ப்ளஸ்ஸின் ஃபேஸ்லிஃப்ட்டில் அலாய் வீல்கள் வழங்கப்பட்டது தெரிந்ததே. ஆனால், ரெடி-கோவில் Wheel Cap-தான் தொடரும் எனத் தோன்றுகிறது. ஆனால் க்விட் போலவே, இங்கும் 14 இன்ச் டயர்கள் இடம்பெறலாம். ரியர்வியூ மிரர்கள் புதிது என்பதுடன், அவை முன்பைவிட பெரிதாகவும் உறுதியாகவும் இருக்கின்றன. முன்பக்க Fender-ல் இண்டிகேட்டருக்கு மேலே Datsun பேட்ஜிங் இடம்பிடித்துள்ளது. இது Iluminated பாணியில் இருந்தால் நன்றாக இருக்கும். பில்லர்களுக்கு கறுப்பு நிற ஸ்டிக்கரிங் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இவையெல்லாம் ரெடி-கோவின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கின்றன. பின்பக்கத்தில் ஸ்பாய்லர் – டெயில் லைட் – பம்பர் ஆகியவை புதிது.
க்ராஸ்-ஓவர் போன்ற டால்-பாய் ஹேட்ச்பேக்காக அறியப்படும் ரெடி-கோ, அந்த ப்ளஸ் பாயின்ட்டை ஃபேஸ்லிஃப்ட்டிலும் தக்க வைத்திருக்கிறது. எனவே BS-4 மாடல் போலவே, BS-6 வெர்ஷனும் அதிக இடவசதியைக் கொண்டிருக்கலாம். ஆல்ட்டோவிலேயே தற்போது டச் ஸ்க்ரீன் வந்துவிட்டதால், இதிலும் அந்த வசதி சேர்க்கப்படலாம். இதற்காக டேஷ்போர்டிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். க்விட் போலவே ரெடி-கோவிலும், முன்பக்க Passenger காற்றுப்பை மற்றும் பின்பக்க பவர் விண்டோவையும் எதிர்பார்க்கலாம். தவிர க்ராஷ் டெஸ்ட் மற்றும் Pedestrian Protection விதிகளுக்கேற்ப, இந்த பட்ஜெட் ஹேட்ச்பேக் மேம்படுத்தப்படலாம்.இன்ஜின் – கியர்பாக்ஸ் ஆப்ஷனைப் பொறுத்தவரை, அதே 800சிசி/1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் – 5 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் தொடரும். BS-6 டியூனிங் காரணமாக, இதன் அராய் மைலேஜில் மாற்றம் தெரியலாம். ஆல்ட்டோ K10 நிறுத்தப்பட்ட நிலையில், இப்போது எஸ்-ப்ரஸ்ஸோ உடன் ரெடி-கோ போட்டிபோடும். இதனுடன் ஆல்ட்டோ 800 மற்றும் ரெனோ க்விட்டும் அடக்கம். 2022/2023 வாக்கில், டட்ஸன் பிராண்ட் எண்ட் கார்டு பெறும் எனத் தகவல்கள் வருகின்றன. அதன்படி பார்த்தால், இந்த நிறுவனத்திலிருந்து வரும் கடைசி மாடலாகக் கூட இது இருக்கலாம். இன்னுமே கோ/கோ ப்ளஸ்ஸின் BS-6 வெர்ஷன் வரவில்லை!