கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை – சென்னை மருத்துவர்கள் சாதனை..!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரலில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி, இதய தசைகளிலும் பிரச்சனை ஏற்பட்டுவருகிறது. மேலும், உடல் மற்றும் மனச் சோர்வு மற்றும் மூளை பாதிப்பு ஆகியவற்றால் பக்கவாதம் கூட ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பின் பலர் மருத்துவமனை செல்வதால் அவர்களை காப்பாற்ற முடியாமல் போவதாக சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். இதனால், அதிகப்படியான செலவாகும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை செல்லும் நிலை ஏற்படுகிறது.
ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த 48 வயதான தொழிலதிபர் ஒருவர், கடந்த ஜூன் 8-ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு நுரையீரல் கடுமையாக சேதமடைந்த நிலையில், ஜூலை மாதம் விமானம் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நுரையீரல் தீவிரமாக பாதிக்கப்பட்டதால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி, ஆசியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் நுரையீரல், பாதிக்கப்பட்ட நபருக்கு பொருத்தப்பட்டது. மருத்துவ குழுவினர் தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த கொரோனா தொற்றாளருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது அவரது புதிய இரு நுரையீரல்களும் சிறப்பாக இயங்குவதாகவும், எக்மோ இல்லாமல் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையின் மூலம், இந்தியாவின் மருத்துவ தலைநகராக தமிழகம் விளங்குகிறது என்ற கூற்றுக்கு, சென்னை மருத்துவர்கள் மற்றுமொரு சான்றளித்துள்ளனர்.