“இளம் வீரருக்கு சிறந்த வாய்ப்பு” – ஸ்ரீனிவாசன் விளக்கம்
13-வது சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் துபாய் சென்றுள்ளனர். அங்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகக் கூறி சுரேஷ் ரெய்னா உடனே நாடு திரும்பினார்.
சுரேஷ் ரெய்னாவின் மாமா கொல்லப்பட்டதால் அவர் நாடு திரும்பியதாக தகவல் வெளியானது. ஆனால், சிஎஸ்கே அணியினர் துபாய் செல்வதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது 20ம் தேதியே சுரேஷ் ரெய்னாவின் உறவினர் கொல்லப்பட்டுள்ளார். அதன்பின் 10 நாட்கள் கழித்தே அவர் போட்டி தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. சிஎஸ்கே அணி நிர்வாகிகள் மற்றும் அணித்தலைவர் தோனியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே சுரேஷ் ரெய்னா தொடரில் இருந்து விலகியதாக தெரிகிறது.
சுரேஷ் ரெய்னா துபாய் சென்றது முதல் தோனியை போன்று தனக்கும் பால்கனியுடன் அறை ஒதுக்கித் தரும்படி அணி நிர்வாகத்திடம் வற்புறுத்தியதாகவும், இதனை அணி நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், வீரர்கள் இருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சுரேஷ் ரெய்னா அச்சத்தில் இருந்து வந்ததாகவும், துபாய் செல்லும் முன் சேப்பாக்கம் மைதானத்தில் ஒருவாரம் தங்கி பயிற்சி மேற்கொண்டது தவறானது என்றும் சுரேஷ் ரெய்னா அதிருப்தியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அணியில் விளையாடுமாறு யாரையும் நிர்பந்திக்க மாட்டேன் என்றும் விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறிவிடலாம் என்றும் சீனிவாசன் விமர்சித்துள்ளார். அணி நிர்வாகத்தை தோனி கட்டுக்குள் வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட சீனிவாசன், ரெய்னா வெளியேறியிருப்பதால் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு சிறந்த வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், இந்த தொடரில் அவர் நட்சத்திர வீரராக உருவெடுக்கக் கூடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.