தங்களது நிறுவன குழுமமான, ஃபியூச்சர் ரீடெய்ல் குழுமத்தைக் காப்பாற்றுமாறு அமேசானைக் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் உதவ முன்வராத அமேசான் உதவவில்லை என்பது மட்டுமல்லாது, தங்கள் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் வாங்கும் முயற்சியையும் அமேசான் தடுத்து வருகிறது என ஃபியூச்சர் குழும நிறுவனர் கிஷோர் பையானி வேதனை தெரிவித்து குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி நேர்காணல் ஒன்றில் பேசிய கிஷோர் பையானி, “ஃபியூச்சர் நிறுவன குழுமத்தின் நிதிநெருக்கடிகள் பற்றி அமேசானிடம் 8 முறை தெரிவித்தும், அமேசான் உதவ முன்வரவில்லை. அமேசானுக்கும் எங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஒன்று உண்டு. அதன்படி நிதி நிறுவனங்கள் மூலமாக நிதியளிக்கவோ அல்லது ஏற்கெனவே கடன் அளித்தவர்களின் தொகையை தங்கள் பொறுப்பின் கீழ் கொண்டு வந்தோ இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். ஆனால் அமேசான் முன்வரவில்லை” என்றார்.
மேலும் தங்கள் நிறுவனம் அழியட்டும் என அமேசான் கருதுவதாகவும், கடந்த ஆகஸ்டு மாதமே ஃபியூச்சர் குழுமத்தின் அனைத்து சில்லரை விற்பனை நிலையங்களையும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் பையானி அந்த நேர்காணலில் குறிப்பிட்டார். எனினும் இதனை தடுக்கும் விதமாக சிங்கப்பூர் பன்னாட்டு நடுவர் மன்றத்தில் முறையீடு செய்து, ரிலையன்ஸ்-பியூச்சர் நடவடிக்கைகளை அமேசான் தடுத்து நிறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே ஃபியூச்சர் குழுமம் ஒப்பந்த மீறல் செய்துவிட்டதாக அமேசான் கூறிய நிலையில், இதுபற்றி பேசிய பையானி, “4-5 முதலீட்டாளர்களை அவர்களுக்கு பரிந்துரை செய்தும், அமேசான் எங்களது பிரச்சனைகளைத் தீர்க்க முனையவில்லை. அவர்கள் வெறும் வாய் வார்த்தையாகத் தான் கூறுகிறார்கள். அமேசானின் நோக்கம் என்ன? ஃபியூச்சர் குழும ஊழியர்கள், சப்ளையர்கள், விற்பனையாளர்கள், கடன் அளித்தவர்கள் யார் எக்கேடு கெட்டுப் போகட்டும் என்பது தானே? எங்கள் நிறுவனம் அழியட்டும் என்பதுதானே?அமேசா
அதனால் ரிலையன்ஸை அணுகி ஃபியூச்சர் நிறுவனத்தை விற்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினோம், அதை அமேசானிடமும் தெரிவித்த போதும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை” என்றார் பையானி. ஃபியூச்சர் ரீடெயில் நிறுவனத்தில் 5% பங்குகளை அமேசான் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பையானி, விட்சிக் அட்வைசரி சர்வீசஸ் நிறுவனத்திடமும் , சமாரா கேப்பிடல் நிறுவனத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தியிருந்த நிலையில், எதுவும் கைகொடுக்காததால், ஒரே மாதத்தில் ஃபியூச்சர் பங்குகளின் விலை 70% குறைந்தது. இந்த ஒப்பந்தத்தால், தங்களுக்கு ஒரு பைசா கூட லாபம் இல்லை என்பதுடன், கடந்த 30 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு உருவாக்கிய ரீடெய்ல் நிறுவனங்களை இழந்ததுதான் மிச்சம் என்று கூறியவர், இந்நிலையில்தான் தங்களைக் காப்பாற்றும் மீட்பராக ரிலையன்ஸ் முன் வந்ததாக தெரிவித்துள்ளார்.
ஃபியூச்சர் ரீடெய்லின் கடன் சுமை கடந்த ஜூன் மாதத்தில் ரூ. 11,250 கோடியாக அதிகரித்ததை அடுத்து வங்கிகள் மற்றும் கடனாளர்களிடமிருந்து நெருக்கடி உண்டானது. இதனால் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகிய ஃபியூச்சர் நிறுவனம் ரிலையன்ஸை நாடியது. சிங்கப்பூர் பன்னாட்டு நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து, ஃபியூச்சர் – ரிலையன்ஸ் உடன்படிக்கையை அமேசான் நிறுத்தியதுடன், பங்குதாரர்களையும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பையும் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனம் ஏமாற்ற முனைவதாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமேசான் தெரிவித்தது.
எனினும் ரிலையன்ஸ்-ஃபியூச்சர் உடன்படிக்கை சட்டப்பூர்வமானது என்று பியூச்சர் நிறுவனம் வலியுறுத்தியது. அதே சமயம் சிங்கப்பூர் பன்னாட்டு நடுவர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் வகையில், ரிலையன்ஸுடனான உடன்படிக்கையை ஃபியூச்சர் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த வேளையில் தான் அமேசான் தங்களை அழிக்கப்பார்ப்பதாக ஃபியூச்சர் நிறுவனர் கிஷோர் பையானி வேதனை தெரிவித்துள்ளார்