வாட்ஸ் அப் மூலம் பெண் மருத்துவருக்கு ஆபாச படம் அனுப்பிய ஊழியர்!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய மருத்துவமனை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் தருமபுரம் அடுத்துள்ள கணபதி நகரை சேர்ந்தவர் தர்மராஜ்(44). காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் லேப் டெக்னிசியனாக பணியாற்றி வரும் இவர், அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் மருத்துவர் ஒருவருக்கு செல்போனில் வாட்ஸ் அப் மூலம் ஆபாசப் படங்களை அனுப்பியதாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு பொது மருத்துவமனை நிலைய அதிகாரிகளிடம் பெண்மருத்துவர் முறையிட்டுள்ளார்.அதனடிப்படையில் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லேப் டெக்னீசியன் தர்மராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் காரைக்கால் நகர போலீசார் சைபர் கிரைம் குற்றப் பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையறிந்த லேப் டெக்னீசியன் தர்மராஜ் தலைமறைவாகியள்ளார். தலைமறைவாகியுள்ள மருத்துவமனை லேப் டெக்னீசியன் தர்மராஜை பிடிக்க போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.