யோகா செய்வோர் இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்..!
உடலுக்கும் மனதிற்கும் ஓய்வாக இருக்கும் யோகா ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அவசியமான ஒன்று. அவ்வாறு யோகா பயிற்சி செய்ய நீங்கள் முடிவெடுத்திருந்தால் அதற்கு முன் இந்த விஷயங்களை தெரிந்துகொள்வது நல்லது. நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் மெதுவாகவே கற்றுக்கொள்வீர்கள் எனில் படிப்படியாக செல்லுங்கள். அதேபோல் உங்கள் உடலின் தகுதி அறிந்து ஆரம்ப நிலை ஆசனங்களிலிருந்து ஆரம்பியுங்கள்.
யோகா நிலைகளை மேற்கொள்ளும்போது உடல் மட்டுமல்ல ஒட்டு மொத்த மனதின் கவனமும் அந்த நிலையின் மீதும், உடல் மீதும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். அப்போதுதான் யோகா பலன் தரும். எனவே அதை உங்கள் மனம் முழுமையாக உள் வாங்கிக்கொள்ளும் வரை பொறுமையாக செய்யுங்கள். அதற்குள் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டாம். ஆடை விலகுதல் குறித்த கவலையின்றி பயிற்சி செய்யுங்கள். யோகா செய்வதற்கு ஏற்ற பேண்ட் , டி.ஷர்ட் வாங்கிக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் செய்யும் ஆசனங்களுக்கு ஏற்ப ஆடை சௌகரியமாக இருக்கும். எனவே 2 செட் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.
உடல் கூறும் மொழி அறிந்து செயல்படுங்கள். உடலைக் கட்டாயப்படுத்தி செய்யும் விஷயம் தவறாக முடியும். எனவே உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறதெனில் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் துவங்குங்கள். யோகா பயிற்சி என்றதும் உடனே அனைத்து உபகரணங்களையும் அதிக விலைக் கொடுத்து வாங்கிவிடாதீர்கள். குறிப்பாக அதிக விலை கொடுத்து மேட் வாங்காதீர்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஆரம்பத்தில் சமாளித்துக்கொள்ளுங்கள். படிப்படியாக சென்றதும், தேவை இருப்பின் வாங்கிக்கொள்ளுங்கள்.
மனம் இயல்பாக இல்லை எனில் ஓய்வு தேவை எனில் ஆழ்ந்த தியான நிலைக்குச் செல்லுங்கள். அதேசமயம் உடல் சுறுசுறுப்புடன் ஆற்றல் மிக்கதாக இருந்தால் சவாலான ஆசன நிலைகளை மேற்கொள்ளுங்கள். மனதின் எண்ணம் படி யோகா நிலைகளை செய்தால் பலனை முழுமையாகப் பெறலாம்.