முதல்வர், துணை முதல்வர் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மரியாதை – தேவர் ஜெயந்தி
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 113 வது ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது பிறந்த நாளான இன்று தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார். அதை தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு, அங்கிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின்போது ஆண்டு தோறும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுரை கோரிப்பாளையம் தேவா் சிலைக்கு திரளான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வருவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பொது மக்கள், வந்து மரியாதை செலுத்தினர். பெண்கள் பால் குடம் எடுத்து வந்தனர். தென்மண்டல ஐஜி முருகன் தலைமையில் மதுரை மாவட்டத்தில், 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.