பெற்றோர்கள் புகார்களை அடுத்து கர்நாடகா அதிரடி – 5-ம்வகுப்பு வரை நேரலை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை.
பெற்றோர்கள் அளித்த புகார்களை அடுத்து கர்நாடகா அரசு 5ம் வகுப்பு வரை நேரலை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
5ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகளை தனியார் பள்ளிகளில் நடத்துவதாக பெற்றோர்கள் புகார்கள் குவிந்ததையடுத்து கர்நாடக அரசு தடை விதித்தது. முன்கூட்டியே பாடங்களைப் பதிவு செய்து வெளியிடலாமே தவிர ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கர்நாடக கல்வி அமைச்சர் சுரேஷ் குமார் உத்தரவிட்டார்.
‘வகுப்பறை கற்றலை ஆன்லைன் வகுப்புகள் பதிலீடு செய்ய முடியாது. பல தனியார் பள்ளிகள் பாடங்களை விரைவில் முடிக்க அவசரப்பட்டு இதனைச் செய்து வருகின்றனர். இந்த அணுகுமுறையிலிருந்து நகர வேண்டிய தேவையுள்ளது’ என்றார் சுரேஷ் குமார்.
கர்நாடகக் கல்வித்துறை நிபுணர்கள் குழுவை அமைத்து அவர்களின் வழிகாட்டுதல்களின் படி முடிவுகளை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. முன் கூட்டியே பதிவு செய்து வெளியிடப்படும் பாடங்களாக இருந்தாலும் கால அளவை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. திரையின் மூலம் பாடம் கற்கும் கால அளவு இரண்டரை மணி நேரங்களுக்கு மேல் மிகக்கூடாது.மேலும் ஸ்மார்ட்போன்கள், கணினி வசதிகள் இல்லாத மாணவர்களை இந்த வகுப்புகளிலிருந்து ஒதுக்குதல் கூடாது என்பதையும் அமைச்சர் சுரேஷ் குமார் வலியுறுத்தினார்., ‘இருப்பவர்கள் இல்லாதவர்கள் இடையிலான இடைவெளி ஆன்லைன் வகுப்புகளில் பிரதிபலிப்பது கூடாது’ என்றார்.
ஆனால் முன் கூட்டியே பதிவு செய்த பாடங்கள் மூலம் பள்ளிகளின் ‘டார்ச்சர்’ தொடர்கிறது எனவே இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கே முற்றிலுமாக முழுக்கு போட வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கர்நாடக அரசைச் சாடும்போது, ‘அரசு எப்போதும் தனியார் பள்ளிகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளி மாணவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் எப்படிப் படிப்பார்கள் என்பது பற்றி எந்த வித கவலையும் அரசுக்கு இல்லை’ என்று சாடினார்.