பிரதமர் மோடி பொன் மாரியப்பனுடன் உரையாடல்…
பிரதமர் மோடி 70-வது மனதின் குரல் என்னும் மன் கி பாத் நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றினார். அப்போது, பண்டிகை காலம், உள்ளூர் உற்பத்தி பொருட்களை வாங்குதல், கொரோனா தொற்று என பல விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினர். தொடர்ந்து, தமிழகத்தின் தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வரும் பொன் மாரியப்பனுடன் பிரதமர் மோடி உரையாடினார். வணக்கம் நல்லா இருக்கீங்களா? என பேசிய பிரதமர் மோடி, நூலகம் நடத்தும் யோசனை எப்படி வந்தது என கேட்டறிந்தார். அவரிடம் பேசும்போது ஒருசில வார்த்தைகளை தமிழில் பேசினார் பிரதமர் மோடி.
மேலும் பேசிய பிரதமர் மோடி, ‘விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆண்டு மிகவும் எளிமையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பண்டிகை கொண்டாட்டங்கள் வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும். பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்கும்போது உள்ளூர் பொருட்களை அதிக அளவில் வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். காதி விற்பனை நிலையங்களில் விற்கப்படும் முக கவசங்களை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.வரிசையாக பண்டிகைகள் வர உள்ளதால் தனிமனித இடைவெளியுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள்’ என்று தெரிவித்தார்.