நோக்கியாவில் 42 பேருக்கு கொரோனா தொற்று , மூடப்பட்ட ஆலை… மீண்டும் தொடங்குவோம் நோக்கியா நம்பிக்கை
சென்னை: சென்னை அருகே நோக்கியா ஆலையில் பணியாற்றிய 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோக்கியா ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சோதனையில் அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஆலையில் நோக்கியா நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதனிடையே ஆலையில் எத்தனை தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பதை நோக்கியா வெளியிடவில்லை.
ஆனால் இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு வட்டாரத்தினர், நோக்கியா ஆலையில குறைந்தது 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். கொரோனாவை தடுக்க சமூக விலகல் மற்றும் கேண்டீன் வசதிகளில் மாற்றங்கள் போன்ற நடவடிக்கைகளை ஏற்கனவே செயல்படுத்தியுள்ளதாக நோக்கியா நிறுவனம் அண்மையில் கூறியிருந்தது.
கடந்த சில வாரங்களாக இந்த தொழிற்சாலை கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவு பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கியது.ஆனால் பணியாளர்களக்கு கொரோனா அதிகமானதால் தற்காலிகமாக ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நோக்கியா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இந்தியா தனது பொருளாதாரத்தை காப்பாற்ற உலகின் மிகப்பெரிய லாக்டவுனை தளர்த்தியுள்ளது. நாங்கள் கட்டுப்பாடுகளுடன் எங்கள் ஊழியர்களுடன் விரைவில் உற்பத்தியை தொடங்குவோம் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தது.