நிலத்தை 6 மாதங்களில் தமிழக அரசு ஒப்படைக்கும் – ஜிதேந்தர்சிங் தகவல்…
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ள ராக்கெட் ஏவுதளம் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருந்தார்.இதற்கு மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தித் அமைச்சர் டாக்டர்.ஜிதேந்தர் சிங் எழுத்துப்பூர்வ பதிலளித்துள்ளார். அதில், ‘‘மத்திய விண்வெளித்துறையின் கோரிக்கையின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மாதவன்குறிச்சி, படுக்கபத்து மற்றும் பள்ளக்குறிச்சி கிராமங்களில் இருந்து, 961 ஹெக்டேர் நிலங்களை இத்திட்டத்துக்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இவற்றில், 431 ஹெக்டேர் நிலத்தின் நில அளவீடு முடிவடைந்துள்ள முழுமையாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள நிலங்களுக்கான அளவீட்டுப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் தமிழக அரசு மத்திய அரசிடம் இந்த நிலத்தை ஒப்படைக்கும் என எதிர் பார்க்கப்படுவதாகவும், அதன் பின்னர் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கள் விண்வெளி ஏவுதள கட்டுமானப் பணிகள் நிறைவடையும் எனவுத் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் ராக்கெட்டுகள் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்பட்டு வருகின்றன.
தற்சமயம் அங்கு 2 ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளன. வர்த்தகரீதியிலான ராக்கெட் ஏவும் பணி அதிகரித்திருப்பதாலும், ஜிஎஸ்எல்வி., போன்ற பெரிய ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கு வசதியாகவும் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வந்தது.
இதற்கான ஆய்வின் போது, ராக்கெட்டுகளை ஏவ தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரபட்டிணம் ஏற்ற இடம் எனத் தெரிய வந்தது. குலசேகரப்பட்டிணம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் இங்கிருந்து ராக்கெட்டுகளை புவி வட்டப்பாதையில் செலுத்துவதன் மூலம் 600 கிலோ எரிபொருள் எடை குறையும். மேலும் ரூ 100 கோடி அளவுக்கு செலவு மிச்சமாகும் என இஸ்ரோ கணித்ததுள்ளது. மேலும், இங்கு ஆண்டு முழுவதும் சரியான காலநிலை இருப்பதால், ராக்கெட் ஏவதற்கு மிகவும் சாதகமான இடமாக இருக்கும் எனும் பல ஆய்வுகளில் தெரியவந்தது