தலைமை பொறுப்பேற்ற ராகுல், பிரியங்கா காந்தி தயக்கம்..!
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். அதன்பின்பு அக்கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வாகி ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இன்னும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு யார் வருவார் என்பது குறித்து தெளிவான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் மீண்டும் ராகுல் காந்தியே பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஒருசாரார் கூறி வரும் சூழலில், அதனை ராகுல் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
நேரு குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக தேர்வு செய்யவேண்டும் என்று ராகுல் காந்தி முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல கட்சியின் பொதுச் செயலாளராக உள்ள பிரியங்கா காந்தியும் தலைவர் பதவியை ஏற்பதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார். நேரு குடும்பத்தை சாராத ஒருவரே தலைவராக வர வேண்டும் என்பதில் பிரியங்கா காந்தியும் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
உடல்நலக் குறைவால் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகி இருந்த சோனியா காந்தி, முக்கிய தலைவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கவே கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடைக்காலத் தலைவர் பொறுப்பில் நீடித்து வருகிறார். இந்தநிலையில் ராகுல், பிரியங்காவின் தயக்கம், சோனியா காந்தியின் உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அகில இந்திய காங்கிரசை வழிநடத்துவதற்கு புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.