தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடக்கிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டம் முதல்முறையாக சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கூட உள்ளது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடர், 16ஆம் தேதிவரை 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை பேணும் வகையில் சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மறைந்த முதலமைச்சர்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களும் கலைவாணர் அரங்கில் வைக்கப்பட்டுள்ளன.
அரங்கத்தின் 3வது தளத்தில் முதலமைச்சர் மற்றும் செயலாளர்களுக்கான அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2வது தளத்தில் துணை சபாநாயகர், துணை முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் அறைகள் அமைந்துள்ளன. தரைத்தளத்தில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவை கூடுவதை முன்னிட்டு முதலமைச்சர் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தொற்று உறுதி செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 3 பேர் மற்றும் அலுவலர்கள் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முதல் நாளான இன்று அவை காலை 10 மணிக்கு கூடியதும், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சேப்பாக்கம் சட்டப்பேரவை எம்எல்ஏ ஜெ. அன்பழகன், கன்னியாகுமரி எம்பி வசந்த குமார் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்படும். பின்னர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்.கூட்டத்தொடரில் துணை நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்குவது தொடர்பான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாட்களிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.முக்கிய பிரச்னைகளை எழுப்பி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீசை சபாநாயகரிடம் திமுக அளித்துள்ளது. கொரோனா விவகாரம், இந்தி திணிப்பு, நீட் தற்கொலைகள் உள்ளிட்ட விவகாரங்களை பேரவையில் எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.