டெல்லி கலவரம்: ஜே.என்.யூ மாணவர் கைது..!
வடகிழக்கு டெல்லியில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கலவரத்தைத் தூண்டியதில் தொடர்பு இருப்பதாக ஜே.என்.யூ ஆய்வு மாணவரான ஷர்ஜீல் இமாம் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, இம்மாதம் 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் மாதம், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிக்கையில், நாட்டின் ஒருமைப்பட்டுக்கு எதிராக மக்களைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தது. அரசியல் சாசனச் சட்டத்தை, பாசிச ஆவணம் என இமாம் குறிப்பிட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
டெல்லிக்கு கைது செய்து அழைத்து வருவதற்கு முன்பாக, சிஏஏ, என்.ஆர்.சி போராட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக வழக்கு பதியப்பட்டு, ஷர்ஜீல் இமாம், குவஹாத்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இமாம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13 மற்றும் 15-ஆம் தேதி, ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையைத் தூண்டியதாக அவர் மீது ஏற்கனவே இரு வழக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.