“சாதி வெறி”-ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த சிறுவன் கோவிலுக்குள் நுழைந்ததால் சுட்டுக்கொலை.!!
உத்தர பிரதேசம் மாநிலம் அம்ரோகா மாவட்டத்திலுள்ள டோம்கேரா கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன் விகாஸ் குமார் ஜாதவ். ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த விகாஸ், தலித் இனத்தை சேர்ந்தவர். கடந்த சில தினங்களுக்கு முன் டோம்கேரா கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு விகாஸ் வழிபடச் சென்றிருக்கிறார். அப்போது விகாஸை கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று ஆதிக்க சாதியின தடுத்திருக்கிறார்கள். அதையும் மீறி விகாஸ் சாமி கும்பிட்டதால் அவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் விகாஸ் குமார் கோயிலை விட்டு வெளியில் வந்தவுடன் அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதன்பின் விகாஸின் தந்தை இது குறித்து போலீசாரிடம் புகார் செய்தும் போலீசார் புகாரை ஏற்க மறுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இரவு ஹோரம் உட்பட 4 பேர் கொண்ட ஆதிக்க சாதியினர் விகாஸை வீட்டுக்குள் புகுந்து வெளியே இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்துவருகிறது.
#சனாதன_ஃபாசிசம்:
உ.பி.யில் தான் இந்த கேவலம்.தலித் சிறுவன் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டானாம். அதற்காக அவன் தலையில் சுட்டுப் படுகொலை.சாதிப் பித்துப்பிடித்த கும்பல் செய்த கொடூரம். ஆட்சி பீடத்தில் துறவிகள்.துறவுக் கோலத்தில் சனாதன ஃபாசிசம். #Discrimination #Brutality #Dalit pic.twitter.com/LakfPQuZ00— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 8, 2020
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பதிவில்,”உ.பி.யில் தான் இந்தக் கேவலம். தலித் சிறுவன் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டானாம். அதற்காக அவன் தலையில் சுட்டுப் படுகொலை. சாதிப் பித்துப்பிடித்த கும்பல் செய்த கொடூரம். ஆட்சி பீடத்தில் துறவிகள். துறவுக் கோலத்தில் சனாதன பாசிசம் “என்று கூறியுள்ளார்.