சதுர்த்தி கொண்டாடப்படும் என அறிவித்த இந்து அமைப்புகள்…
விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 22-ஆம் தேதி வர இருக்கும் நிலையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்த அண்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து அமைப்புகள், தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.
இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வழக்கம்போல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராஜஸ்தான் தொழிலாளர்களை கொண்டு ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை ரகசியமான இடத்தில் தயாரித்து வருகிறது. 15 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பகல் -இரவாக சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
3 அடியில் துவங்கி 15 அடி வரையிலான விநாயகர் சிலைகள் வண்ணமயமாக தயாராகி வருகின்றன. சில மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் தடை விதிப்பதை ஏற்க முடியாது என்று இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.