“சசிகலா” விடுதலை குறித்து சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.!!
சசிகலா விடுதலை குறித்து சரியான தேதியை சொல்ல முடியாது என, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தண்டனைக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால், நன்னடத்தை அடிப்படையில், அதற்கு முன்னதாகவே விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக, அவ்வப்போது தகவல்கள் வெளியாகின.இதையடுத்து, பெங்களூருவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் டி.நரசிம்மூர்த்தி என்பவர், சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள சிறை நிர்வாகம், அபராதத் தொகையின் அடிப்படையில் கைதியை விடுதலை செய்யும் தேதி மாறுபடும் என்றும், அதனால் சசிகலாவின் விடுதலை குறித்து சரியான தேதியை கொடுக்க முடியவில்லை எனவும் சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.