என் கண்ணை ஏன் பறித்தாய் இறைவா? 14 வயது செல்வராகவனுக்கு 45 வயது செல்வராகவன் எழுதிய கடிதம்.!
இன்றைக்கு உங்களுடைய வயது எவ்வளவாக இருக்கட்டும், ஆனால் உங்களுடைய 14-வது வயதில் மனநிலை என்னவாக இருந்தது?
ஒருவேளை, 14 வயதிலேயே ஏராளமான மனக்கஷ்டத்துடன் நீங்கள் இருந்திருந்தால் என்னென்ன ஆறுதல் வார்த்தைகள் கூறி உங்களைத் தேற்றிக் கொள்வீர்கள்?
இந்த எண்ணத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். அதாவது 14 வயது செல்வராகவனுக்கு 45 வயது செல்வராகவன் கடிதம் எழுதியுள்ளார்.
இன்ஸ்டகிராமில் அவர் கூறியிருப்பதாவது:
உன் கண்ணில் உள்ள பார்வைக் குறைபாட்டைக் கண்டு உலகம் உன்னைப் பார்த்து சிரிக்கிறது. நீ எங்குச் சென்றாலும் மக்கள் உன்னைப் பார்த்து கேலி செய்கிறார்கள். அதை எண்ணி நீ ஒவ்வொரு இரவும் அழுகிறாய். என் கண்ணை ஏன் பறித்தாய் எனக் கடவுளைப் பார்த்துக் கேட்கிறாய். ஆனால் கவலைப்படாதே செல்வா. சரியாக 10 வருடங்களில் நீ ஒரு கதை எழுதி இயக்கி, சூப்பர் ஹிட் படத்தை எடுக்கப் போகிறாய். அது உன்னுடைய வாழ்வை மொத்தமாக மாற்றப் போகிறது. இப்போது உலகம் உன்னை கேலிப் பார்வையுடன் பார்ப்பதற்குப் பதிலாக மரியாதையுடன் பார்க்கும். அடுத்த பத்து வருடங்களில் தமிழ் சினிமா வரலாற்றில் மகத்தான, முன்னுதாரணமாக விளங்கக் கூடிய படங்களை எடுப்பாய்.மக்கள் உன்னை மேதை என அழைப்பார்கள். மக்கள் உன்னைப் பார்க்கும்போது, உன் வாழ்க்கை முழுக்க உன்னை நோகடித்த கண்ணைப் பார்க்க மாட்டார்கள். தங்களுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய படங்கள் இயக்கியவர் என்கிற கோணத்தில் தான் பார்ப்பார்கள். எனவே, துணிச்சலுடன் இரு. உன்னிடமிருந்து ஒரு பொக்கிஷத்தை இறைவன் எடுத்தால் அதைவிடவும் பலமடங்காக அள்ளிக் கொடுப்பான். எனவே உற்சாகம் கொள். புகைப்படங்களுக்குப் புன்னகை செய். (ஒரு புகைப்படத்திலும் நீ சிரிப்பது போல் இல்லை). வருங்காலத்தில் உன்னை வைத்து ஏராளமான புகைப்படங்களை எடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
மித்ரா அறக்கட்டளை சார்பாக, ஒரு சவால் போட்டிக்காக 14 வயது செல்வராகவனுக்கு இக்கடிதத்தை அவர் எழுதியுள்ளார். மேலும் தன்னுடைய சிறிய வயது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.