இரும்புச்சத்து குறைபாட்டை எவ்வாறு தவிர்ப்பது?
ரெட் பிளட் செல் எனப்படும் சிவப்பு இரத்த அணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபினை தயாரிக்க இரும்புச்சத்து தேவைப்படுகிறது. உடலில் இரும்புச்சத்து குறைபாடு நிகழும் போது இரத்த சிவப்பணுக்களும் குறைகின்றன. நம் உடலில் போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லாமல் இருந்தால், திசுக்கள் மற்றும் தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் போய் சேராது.இதனால் உடல் உறுப்புக்கள் திறம்பட செயல்படாமல் போகின்றன. இதை நாம் கண்டுகொள்ளவில்லை என்றால் இது இரத்த சோகையில் கொண்டுபோய் நிறுத்திவிடும். போஷன் மா 2020 இன் ஒரு பகுதியாக, உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்க உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) சமீபத்தில் சில பயனுள்ள உதவிக்குறிப்புகளை மக்களுக்கு பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் இரும்புச்சத்து குறைபாட்டின் சில அறிகுறிகளை சுட்டிக்காட்டியுள்ளார். அதில் தலைவலி, சோர்வு, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல், அதிக இதயத் துடிப்பு மற்றும் முடி உதிர்தல் போன்றவை பரவலான அறிகுறிகள் என தெரிவித்துள்ளார். “இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியம் என்றும் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளை எதிர்த்துப் போராடுங்கள் என்றும் அவர் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். ஹீம் அல்லாத இரும்புச்சத்து பழங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ்கள் போன்ற தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படுகிறது. ஆனால் இவற்றை உட்கொள்ளும் போது 2 முதல் 10 சதவீத இரும்புச்சத்து மட்டுமே உறிஞ்சப்படுகிறது. வைட்டமின் C நிறைந்த உணவுகள் ஹீம் அல்லாத இரும்புச்சத்து உறிஞ்சுதலுக்கும் மிகவும் ஏற்றது என கூறப்பட்டுள்ளது.