இரட்டை அர்த்தத்தில் விமர்சித்த சுனில் கவாஸ்கர் -குவியும் கண்டனங்கள்…
பஞ்சாப் – பெங்களூருஅணிகளுக்கு இடையிலான போட்டியின்போது விராட் கோலி- அனுஷ்கா சர்மா குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுனில் கவாஸ்கர் பாலியல் ரீதியிலான கமெண்ட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரை, வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று நெட்டிசன்கள் கொதித்துள்ளனர். பஞ்சாப்- பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடினார். அவர், 69 பந்துகளில் 132 ரன்கள் குவித்தார். அவருடைய அதிரடியான பேட்டிங் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவியது.
கே.எல்.ராகுல் பேட்டிங்கின்போது, அவருடைய இரண்டு கேட்ச்களை விராட் கோலி தவறவிட்டார். 83 ரன்களில் ஒரு கேட்ச்சும், 89 ரன்களில் ஒரு கேட்சையும் விராட் கோலி தவறவிட்டார். விராட் கோலியின் பொறுப்பற்ற ஃபீல்டிங் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அப்போது போட்டி குறித்து வர்ணனை செய்துகொண்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், ‘ஊரடங்கு காலத்தில் அனுஷ்கா சர்மாவின் பந்துகளுக்கு மட்டுமே விராட் கோலி பயிற்சி எடுத்துள்ளார்’ என்று பேசினார்.
விராட் கோலி செய்த தவறுக்கு, அனுஷ்கா சர்மாவையும் காரணமில்லாமல் விமர்சிப்பது, பாலியல் ரீதியிலான இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்துள்ளார் என்று சுனில் கவாஸ்கர் மீது விமர்சனங்கள் எழுந்தன. சுனில் கவாஸ்கரின் பேச்சுகளை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். அவரை வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
ஒருபுறம் கே.எல்.ராகுலின் கேட்ச் தவற விட்டதற்கு, விராட்கோலியையும், அனுஷ்கா சர்மாவையும் இணைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். மறுபுறம், பலர் விராட் கோலிக்கு ஆதரவாக சுனில் கவாஸ்கரைச் சாடிவருகின்றனர்.