கோடிக்கணக்கில் உதவி செய்த லாரன்ஸ்
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே கிட்டத்தட்ட ரூபாய் 4 கோடி அளவிற்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி செய்துள்ளார் என்பது தெரிந்ததே. முதல் கட்டமாக அவர் ரூபாய் மூன்று கோடி மத்திய, மாநில அரசுகளுக்கும், பெப்சி, நடன சங்கத்திற்கும் நிதியுதவி செய்த நிலையில் அதற்கு பின்னர் நடிகர் சங்கத்திற்கும் சென்னை செங்கல்பட்டு மாவட்டம் விநியோகிஸ்தர் சங்கத்திற்கும், தூய்மை பணியாளர்களுக்கும் ஒருசில லட்சங்களை அள்ளிக் கொடுத்தார் என்பது தெரிந்ததே.
அம்மா உணவகத்திற்கு உதவி
இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் தற்போது அடுத்த கட்டமாக ரூபாய் 50 லட்சம் அம்மா உணவகத்திற்கு வழங்கியுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் மற்றும் பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் மக்கள் பசியுடன் வாடிய நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே உணவு கிடைக்கும் இடம் அம்மா உணவகம் மட்டும் தான். மிகக் குறைவான விலையிலும் சில அம்மா உணவகங்களில் இலவசமாகவும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டது
இந்த நிலையில் சென்னையில் உள்ள கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களின் செயல்பாட்டிற்காக ராகவா லாரன்ஸ் ரூபாய் 50 லட்சம் அளித்துள்ளார். இந்த இரண்டு பகுதியில்தான் சினிமா தொழிலாளர்கள் மிக அதிகம் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகையை ராகவா லாரன்ஸ் சார்பில் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் ராஜசேகர் அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்களிடம் வழங்கியுள்ளார். இதனை அடுத்து ராகவா லாரன்ஸுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது