இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது… எப்படி?
உலகளவில் இறப்புகளில் முக்கிய காரணங்களில் ஒன்று இதய நோய். உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவது மற்றும் ஆபத்து காரணிகளை நிர்வகிப்பதன் மூலம் இதய நோய் வருவதை தடுக்க முடியும். ஆரோக்கியமான இதயத்தை பெற உங்கள் வாழ்க்கை முறையை மாற்றினால் போதுமானது என ஜாஸ்லோக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மூத்த இருதயநோய் நிபுணர்டாக்டர். எஸ்.ஆர்.ஹண்டா கூறியுள்ளார். இதுகுறித்த மருத்துவர்களின் அறிவுறுத்தல்கள் பின்வருவன.
உடற்பயிற்சி செய்வதால் தசைகள் பலப்படுத்தப்படுகிறது. இதனால் உங்கள் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க, சீரான இரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்க மற்றும் நீரிழிவு போன்றவற்றை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. எனவே தினமும் உடற்பயிச்சி செய்ய முடியாதவர்கள் கூட வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.அதிக உடல் எடை கொண்டவர்கள் எடையை குறைப்பதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். உங்கள் எடையானது வங்கியில் இருக்கும் பணம் போன்றது. அதை குறைக்க நீங்கள் பணம் போடுவதை நிறுத்தி விட்டு பணம் எடுப்பதை அதிகரிக்க வேண்டும். அதேபோல தான் நீங்கள் உண்ணும் அதிக கலோரிகள் நிறைந்த உணவை நிறுத்த வேண்டும். மேலும் கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் இடுப்பு அளவானது பெண்களுக்கு 80 செ.மீக்கும், ஆண்களுக்கு 90 செ.மீக்கும் அதிகமாக இருந்தால் உடல் பருமன் உள்ளது என்று அர்த்தம். அதாவது உங்கள் இடுப்பு சுற்றளவுக்கு மேல் வயிற்று சுற்றளவு இருந்தால் உங்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உங்களது அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் உலர் பழங்கள், உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள். அதேபோல சிவப்பு இறைச்சியை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மீன் போன்ற வெள்ளை இறைச்சியை மிதமாக எடுத்துக் கொள்ளலாம். பன்றி இறைச்சி, கருவாடு போன்ற உப்பு இறைச்சிகளை அறவே தவிர்த்து விடுங்கள். பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதை அதிகரிக்க வேண்டும்.ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க நீங்கள் தொடர்ந்து இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும். உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள் இன்றி ஏற்பட்டாலும், அது இதயம், சிறுநீரக கண்கள் மற்றும் மூளை ஆகியவற்றை பாதிக்கிறது. உங்களுக்கு இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருந்தால் அதனால் உண்டாகும் சிக்கலை தவிர்ப்பதற்கு அவற்றை கட்டுப்பாட்டில் வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
புகையிலை உங்கள் இதயத்திற்கு விஷம் என்பதால் புகைபிடிப்பதை தவிர்த்து விடுங்கள். புகையிலை சாப்பிடுவதை விட்டு வெளியேறுவது உங்கள் ஆரோக்கியமான இதயத்திற்கு ஒரு வரமாக இருக்கும். இதனால் நீங்கள் 10 ஆண்டுகள் வாழ்வீர்கள். புகைபிடிப்பதை விட்டு வெளியேறிய ஒரு வருடம் கழித்து, இதய நோய்க்கான ஆபத்து புகைப்பிடித்தவருக்கு பாதியாக குறையும். 15 ஆண்டுகளுக்கு பிறகு புகைபிடிக்காதவரின் இதயத்தை போல உங்கள் இதயமும் ஆரோக்கியமானதாக மாறும்.ஆல்கஹால் இதயத்தின் இரத்த ஓட்டத்தை தடுத்து இதயத்தை பாதிக்கிறது. மேலும் கல்லீரல் மற்றும் இரைப்பை குடல் அமைப்பை பாதித்து பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. ஆல்கஹால் அருந்துவதால் உங்களுக்கு எவ்வித நன்மையையும் ஏற்பட போவதில்லை, எனவே உங்கள் இதயத்தை பாதுகாக்க ஆல்கஹால் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.