அம்மா சிமெண்ட் விற்பனை நிறுத்தம்…
அம்மா குடிநீர் திட்டம் மறைமுகமாக நிறுத்தப்பட்டுள்ளது போல், குறைந்த விலை சிமெண்ட் திட்டமும் நிறுத்தப்பட்டுவிட்டதோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, குறைந்த விலையில் சிமெண்ட் விற்பனை செய்யும் அம்மா சிமெண்ட் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம், ஏழை, எளியோர் புதிய வீடு கட்டவும், ஏற்கனவே உள்ள வீட்டை பழுது நீக்கவும், 190 ரூபாய் வீதம் 50 முதல் 750 மூட்டை வரை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது.
குறைந்தபட்சம் 100 சதுர அடியும், அதிகபட்சமாக 1500 சதுர அடி வரையும் வீடு கட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டட திட்ட வரைபடம் அல்லது கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் குறைந்த விலை அம்மா சிமெண்ட் வழங்கப்பட்டு வந்தது. மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 500 கிடங்குகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த அம்மா சிமெண்ட் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அம்மா சிமெண்ட் வழங்கப்படாததால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு, அதை சார்ந்த தச்சர், பெயிண்டர், டைல்ஸ் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். ஊரடங்கு தளர்வில் கட்டுமானப் பணிகள், போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கியும் அம்மா சிமெண்ட் வழங்கப்படாமல் இருப்பது, திட்டத்தை தமிழக அரசு கைவிட்டு விட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்களும், தொழிலாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
தனியார் சிமெண்ட் விலை விண்ணை முட்டும் அளவில் உயர்ந்துள்ள நிலையில், அம்மா சிமெண்ட்டை நம்பி வீடு கட்டத் தொடங்கிய ஏழைகள், கட்டுமானப் பணிகள் பாதியில் நின்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். மக்களின் வேண்டுகோளுக்கு அரசு செவி சாய்க்குமா?