இந்தியா

விசாகப்பட்டினம் கேஸ் கசிவு.. கொத்து கொத்தாக சாலையில் விழுந்த மக்கள்.. 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷ வாயு கசிந்து 9 பேர் இறந்ததை அடுத்து அந்த வாயுவை சுவாசித்த 200க்கும் மேற்பட்டோர் நடந்து வரும் போதே மயங்கி விழும் காட்சிகள் பதற வைக்கின்றன.

விசாகப்பட்டினத்தில் தென்கொரியாவைச் சேர்ந்த எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா கடந்த 1997-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு பிளாஸ்டிக்குகளை உருவாக்கும் பாலிஸ்டைரின் தயார் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் 40 நாட்கள் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இன்று இந்த ஆலை திறக்கப்பட்டது. அப்போது பெரிய உலைகளில் இருந்து ஸ்டைரின் எனும் விஷ வாயு அதிகாலை 2.30 மணிக்கு வெளியேறியது.

மூச்சுத் திணறல்
இதனால் அந்த ஆலையை சுற்றி 3 கி.மீ தூரம் கொண்ட மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த விபத்தில் குழந்தை உள்பட 8 பேர் பலியாகிவிட்டனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டாக்டவுனால் பயன்படுத்தப்படாமல் ஆலை இருந்ததாலேயே இந்த கேஸ் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. நீண்ட நாட்களாக 5000 டன் கொண்ட இரு டேங்க்களை பயன்படுத்த முடியவில்லை. இதனால் வெப்பம் அதிகரித்து ரசாயன மாற்றம் ஏற்பட்டதால் கேஸ் கசிவு உண்டானதாக ஆலை தரப்பில் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்
வாயு கசிவு ஏற்பட்டதும் வீட்டுக்குள் இருக்க முடியாத மக்கள் வெளியே ஓடி வந்தனர். இவர்களுக்கு கண் எரிச்சலும் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மீட்பு படையினர் ஆம்புலன்ஸ்களை வரவழைத்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல குழந்தைகளை பொதுமக்கள் தூக்கிக் கொண்டு ஓடி வந்த காட்சி நெஞ்சை உருக்கியது.

சாலைகளில் மயங்கிய மக்கள்
அத்தோடு பெரியவர்கள் சாலைகளில் நடந்து வரும் போதே கொத்து கொத்தாக கீழே விழுந்தனர். சாக்கடைகள், சந்து பொந்துகளில் எல்லாம் மக்கள் எந்த அசைவுமின்றி விழுந்து கிடக்கிறார்கள். குழந்தைகளை ஆம்புலன்ஸில் படுக்க வைத்து அவர்களது தந்தையும் தாயும் இதயம் இருக்கும் பகுதிகளில் அழுத்தி விடுகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்களுக்காக சாலைகளில் மக்கள் காத்திருக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் முகத்தை ஈரத்துணியால் மூடுங்கள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் வீட்டுக்குள் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அவர்கள் வெளியே வரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த விஷ வாயு கசிவால் இன்னும் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

முதலமைச்சரின் நடவடிக்கை
முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி எரிவாயு கசிவு சம்பவம் குறித்து விசாரித்ததோடு, உயிர்களைக் காப்பாற்றவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைக்கு அவர் வருகை தருவார் என்று தெரிகிறது. முதலமைச்சர் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்.


காவல்துறை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் 5 கி.மீ சுற்றளவு பகுதியை காலி செய்யத் தொடங்கியுள்ளன. விசாக் கலெக்டர் வி வினய் சந்த், “என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் அதிகாரிகள் பணியில் இருக்கிறார்கள், அவர்களால் நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்” என்றார்.

வீட்டு விலங்குகள் பரிதாபம்
ஐந்து கிராமங்களும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளன. மிகவும் சீரியஸானவர்கள் கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விஷ வாயு கசிந்ததால் காலை 6 மணி வரை நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இப்போது, இது கொஞ்சம் தணிந்துள்ளது. செல்ல நாய்கள், கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட ஏராளமான வீட்டு விலங்குகள் இறந்துவிட்டன. நிலைமையை மதிப்பிடுவதற்காக கால்நடை மருத்துவர்கள் குழு கிராமங்களை அடைந்துள்ளது. ஓரிரு மணி நேரத்தில், நிலைமை மேம்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.