“EIA 2020” வரைவு – கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
வளர்ச்சித்திட்டங்களின் புதிய வழிகாட்டியான மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020, சுற்றுச்சூழலையும், பொதுமக்களையும் பாதிக்கும் என சூழலியாளர்களும், அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வரைவு அறிவிக்கையை தமிழ் உள்பட 22 மொழிகளில் வெளியிட நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்தும், மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை தொடங்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ், அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தின் கீழ், திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும்.சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அரசு அனுமதி வழங்கவோ, இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும். இந்நடைமுறையை மாற்றியமைத்து, சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 என்ற பெயரில், பெரு நிறுவனங்களுக்கு சாதகமான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பிட்ட சில பெரிய முதலீட்டுத் தொழில் திட்டங்களுக்கான பொதுமக்கள் கருத்துகேட்பை இந்த புதிய வரைவு தடை செய்கிறது. அதே போல, தொழிற்சாலைகள் குறித்த பொதுமக்கள் கருத்துகேட்பிற்கான கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 20 நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமலேயே ஒரு திட்டத்தை தொடங்கவும், ஏற்கெனவே உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் இந்த வரைவு அனுமதி அளிக்கிறது.திட்டம் தொடங்கப்பட்ட பின்பு ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த திட்டத்தை ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில, மத்திய குழுக்கள் என இரு அமைப்புகளிடம் ஒப்புதல் வாங்க வேண்டியதில்லை என்ற நிலை ஏற்படும் என்றும் மாநில அரசின் அதிகாரம் குறையும் என்றும் கூறுகின்றனர் ஆர்வலர்கள்.