கடந்த நவம்பர் 18 ஆம் தேதி அமெரிக்காவின் உட்டா பாலைவனப் பகுதியில் திடீரென்று ஒரு உலோகத்தூண் முளைத்தது. பறவைகள் கூட செல்லப் பயப்படும் கடுமையான பாலைவனப் பகுதியில் திடீரென்று 12 அடி உயரமுள்ள ஒரு கல் நடப்பட்டு இருந்தால் எப்படி இருக்கும்? எனவே இந்தத் தூண் பற்றிய தகவல் காட்டுத் தீயைவிட படுவேகமாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த மர்மத்தூண் முழுவதும் உலோகத்தால் இருந்ததாகக் கூறப்பட்டது. இதனால் அதை அருகில் சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் எனப் பலரும் முயன்றனர். இதையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் இந்த மர்மத்தூணை யார் நட்டு இருப்பார்கள்? ஒருவேளை ஓடிசி படத்தின் ரசிகர்கள் யாராவது நட்டு வைத்திருப்பார்களா? அல்லது இது ஏலியன்களின் வேலையாக இருக்குமா? எனப் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் முளைத்தன.
அமெரிக்கா உட்பட்ட ருமேனியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து என பல்வேறு நாடுகளில் மர்ம உலோகத்தத்தூண் கண்டுபிடிக்கப்படுவதும் பின்பு சில நாட்களுக்கு பின் மறைவதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பூங்கா ஒன்றில் 9 அடி உயர மோனோலித் எனப்படும் மர்ம உலோகத்தூண் தோன்றியுள்ளது. ஆனால் இந்த தூண் இரும்புக்கு பதிலாக அலுமினியம் மற்றும் பிளைவுட்டுகளால் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது மீண்டும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.