முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மு.க ஸ்டாலின் மரியாதை…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58-வது குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், மதுரையில் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் ஃபேஸ்புக் பதிவில், ”பசும்பொன் தேவர் அவர்களின் 113-ஆவது ஜெயந்தியை முன்னிட்டும், 58-ஆவது குரு பூஜையை முன்னிட்டும் பசும்பொன் வந்து மரியாதை செலுத்தியிருக்கிறேன்.
நாட்டு விடுதலைக்காகப் போராடிய தேவர் அவர்கள் தமிழ் மொழி மீது ஆழமான பற்றுக் கொண்டவர். தமிழ் மொழி, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமை, பொதுவாழ்வில் நேர்மை போன்றவற்றிற்காகத் தன் வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர் தேவர் பெருமகனார் அவர்கள். மாபெரும் புகழுக்குச் சொந்தக்காரரான தேவர் பெருமகனுக்கு அவரது நினைவிடமான பசும்பொன் வந்து மரியாதை செலுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது.
கழகம் ஆட்சியில் இருந்த போது, “பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நினைவிடம் அமைக்கப்பட்டது. தேவர் பெயரில் அரசு கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மதுரையில் 13 அடி உயரத்திற்குத் தேவர் சிலை அமைக்கப்பட்டது” என்பதை இந்த நேரத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இளைஞர்களின் அன்பைப் பெற்ற தேவர் பெருமகனார் அவர்களின் புகழ் வாழ்க, வளர்க! அவர் காட்டிய பொது வாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்! என்று தெரிவித்துள்ளார்.