வெங்காய விலையில் ஏற்ற இறக்கம்…
தமிழகத்தின் சின்ன வெங்காய தேவைவை பூர்த்தி செய்வதில், குறிப்பிடப்படும் இடத்தில் இருப்பது பெரம்பலூர் மாவட்டம். பூச்சி தாக்குதல், வறட்சி, விலையின்மை உள்ளிட்ட பல்வேறு தடைகளை கடந்தும் சின்ன வெங்காய விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள். இந்த நிலையில் அண்மையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத விலை உயர்வின் காரணமாக, சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசும் வியாபாரிகள், வெங்காயம் விலை 150 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாலும், சிறப்பு அங்காடிகள் மூலம் அரசு குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாலும், விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதாக தெரிவித்தனர். இதனால் விவசாயிகளிடம் இருந்து வாங்கிய சின்ன வெங்காயத்தை விற்பனை செய்வதற்குள் விலை குறைந்துவிட்டால் தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுவிடும் எனவும் கூறுகின்றனர்.
அதேவேளையில், 150 ரூபாய்க்கு விதை வெங்காயம் வாங்கி, உழவு செய்து, தண்ணீர் பாய்ச்சி, உரம் தெளித்து விளைவிக்கப்பட்ட சின்ன வெங்காயத்தினை, நல்ல விலை விற்கும் பொழுது வியாபாரிகள் வாங்க மறுப்பதால், தங்களுக்கும் பெரிய அளவில் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மழைக்காலத்தில் பட்டறை அமைக்க முடியாமலும், வெங்காயத்தை உலர வைக்க முடியாமலும் போவதால், அவை அழுகிப் போவதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், செட்டிகுளம் பகுதியில் உள்ள சின்ன வெங்காய கிடங்கினை, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் பாலமாக செயல்பட்டு, சின்ன வெங்காய கொள்முதலை சுமூகமாக நடத்த வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தரப்பின் கோரிக்கையாக உள்ளது.