குலசை தசரா விழா: கடும் கட்டுப்பாடுகளால் வியாபாரிகள் ஏமாற்றம்
உலகப் புகழ் பெற்ற இந்த தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த குலசேகரப்பட்டினத்தில் 10 நாட்கள் தசரா கொண்டாடப்படும். தூத்துக்குடி மட்டுமின்றி நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பல்வகை வேடங்களை அணிந்து வந்து அம்மனை வழிபடுவர். பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிவர். இந்த விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான தெருவோரக் கடைகள் போடப்படும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வேடமணிந்து சென்று வழிபடவும் தடை விதிக்கப்பட்டது. வழக்கமாக 10 லட்சம் பேர் வருகை தரும் தசரா திருவிழாவிற்கு, இந்த ஆண்டு ஆயிரக்கணக்கில் மட்டுமே வந்து சென்றனர். அதனால் வருவாய் ஈட்ட முடியாமல் வியாபாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.