இந்தியா

ஊதியமின்றி வாடும் 105 தொழிலாளர்களை குவைத் நாட்டிலிருந்து மீட்கவேண்டும் – சீமான் கோரிக்கை

குவைத் நாட்டில் நான்கு மாதங்களாக ஊதியமின்றி வாடும் இந்தியாவைச் சேர்ந்த 99 தமிழர்கள் உள்ளிட்ட 105 பேரை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, ”குவைத் நாட்டிலுள்ள அகமது அல்தாரிக் சன்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த 99 தமிழர்கள் உள்ளிட்ட 105 தொழிலாளர்கள் ஊதியம் கிடைக்கப்பெறாது உணவுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்குமே அல்லல்பட்டு வருகிற செய்தி பெரும் மனவேதனையைத் தருகிறது. கடந்த 2020, சூன் மாதத்திலிருந்து இதுநாள் வரை, ஒப்பந்தப்படி வழங்கப்படவேண்டிய மாதாந்திர ஊதியத்தை வழங்காமல் அந்நிறுவனம் மறுத்து வருவதும், ஒப்பந்தக்காலம் முடிந்தும் தாயகம் திரும்ப விரும்பும் தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாகப் பணிபுரிய நிர்பந்திப்பதுமென அந்நிறுவனத்தின் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது.

நான்கு மாதங்களாக ஊதியமில்லாத நிலையில் அத்தொழிலாளர்கள், தங்களது அன்றாட உணவு மற்றும் மருத்துவத்தேவைகளைக்கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் தவித்து வருகின்றனர். மேலும், அந்நிறுவனத்தால் குடியமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் குடியிருப்பிற்கு, தொடர்புடைய நிறுவனம் வாடகை தராததால், குடிநீர், மின்சாரம் போன்றவை துண்டிக்கப்பட்டுள்ளது என்பதும், கட்டட உரிமையாளர்களால் எப்போது வேண்டுமானாலும் குடியிருப்பைவிட்டு வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்துடனேயே தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் தாங்கொணாத் துயரமாகும்.

இந்நிறுவனத்தில் பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் 40 வயதைக் கடந்தவர்களாக இருக்கின்ற காரணத்தால், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாகவும், ‘விசா’ காலம் முடிந்துவிட்டபடியால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சட்டப்பூர்வமாகத் தங்களுக்கான தக்க மருத்துவம் முறையாகச் செய்து கொள்ள இயலாமல் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களாகவும் சிரமப்பட்டு வருவது அத்தொழிலாளர்களின் குடும்பத்தினரைப் பெருங்கலக்கத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்களின் இத்தகைய இக்கட்டான சூழலை விளக்கி குவைத்திலுள்ள இந்தியத் தூதரகத்திற்குச் செய்தியும், புகாரும் தரப்பட்டுள்ளது. வழமைபோல, தமிழர்களுக்கான பிரச்சனைகளை அதிகம் கவனத்தில் கொள்ளாத தூதரகம் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் காரணமாகக் காட்டி மெத்தனப்போக்குடன் செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, மத்திய அரசின் வாயிலாக அழுத்தம் கொடுத்து பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு நான்கு மாத ஊதியம், பணிக்கொடை மற்றும் நிலுவைத் தொகையினைப் பெற்று தந்து தாயகம் திரும்புவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.