ஐதராபாத்தில் குடியிருந்து வரும் நடிகை முமைத்கான் தமிழில் பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார் . முன்னணி ஹீரோ படங்களிலும் நடித்துள்ளார். கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே, விஜய்யின் போக்கிரி படத்தில் என் செல்லப்பேரு ஆப்பிள், கந்தசாமி படத்தில் என் பேரு மீனாகுமாரி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.முமைத்கான் தனக்குத் தர வேண்டிய 15000 ரூபாயைத் தராமல் ஏமாற்றியதாக கார் ஓட்டுநர் ராகவா ராஜூ என்பவர் இரு தினங்களுக்கு முன்னர் முமைத்கான் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
முமைத்கான் கோவா செல்ல வேண்டும் என்று தனது காரை புக் செய்து அங்கு 3 நாட்கள் இருக்க வேண்டும் என்று கேட்டதாக கூறினார். மூன்று நாட்களை 8 நாட்கள் ஆக்கிவிட்டு, தனக்கு தர வேண்டிய வாடகை பணமான, 15000 ஆயிரம் ரூபாயைத் தரவில்லை என்று கூறி இருந்தார்.ஆதாரமாக, முமைத்கான் அனுப்பிய போன் நம்பருடன் கூடிய முகவரி, சுங்கச் சாவடிகளில் பணம் செலுத்திய ரசீதுகள், ரசிகர்கள் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டார்.
தன்னைப் போல் மற்றொரு ஓட்டுநர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இதை சொல்வதாகவும் ராஜூ கூறி இருந்தார். இதுபற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்த நடிகை முமைத் கான், ஐதராபாத்தின் மேற்கு பகுதியில் உள்ள புஞ்சகட்டா காவல்நிலையத்தில் அந்த கார் ஓட்டுநர் மீது வியாழக்கிழமை புகார் அளித்தார்.அதில் ஓட்டுநர் ராகவா ராஜூ கூறிய புகாரை மறுத்துள்ள நடிகை முமைத் கான், அவருக்கு கொடுக்க வேண்டிய தொகை முழுவதையும் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
தனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ராஜூ கூறியுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் முமைத்கான் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுபற்றி இருவரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ள புஞ்சகட்டா போலீசார், தவறு யார் மீது இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். முமைத்கானின் புகாரை அடுத்து ராஜூ ஓட்டுநர் சங்கத்தின் உதவியை நாடியுள்ளார்.போலீசாரின் விசாரணையில் முமைத்கான் ஓட்டுநருக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றினாரா? அல்லது ஓட்டுநர் முமைத்கானை பழிவாங்க இதுபோன்று அவதூறு பரப்பினாரா என்பது தெரியவரும்.