படையைக் குவிக்கும் இந்தியா – சீனா ஊடுருவினால் பதிலடி கொடுக்க நடவடிக்கை…
லடாக் எல்லையில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதை அடுத்து, போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவம் எல்லையில் படைகளை குவித்து வந்த நிலையில், தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், படைகள் பின்வாங்கின. இருப்பினும், சீனா அடிக்கடி அத்துமீறுவதால், பதற்றம் நீடித்தே வருகிறது. இதுவரை 6 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், பதற்றம் ஓயவில்லை. இதனால், இருநாட்டு வீரர்களும் லடாக் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு தற்போது குளிர் வாட்டுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 14,500 அடி உயரத்தில் இருக்கும் லடாக் பகுதியில் தற்போது மைனஸ் 40 டிகிரி அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. இதனால், கடும் குளிரை தாங்கும் குடில்கள், சமையல் செய்வதற்கான வசதி மற்றும் கழிவறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய வீரர்களுக்கு தேவையான குளிர்கால உடைகளும் கடந்த மாதமே கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கூடுதல் படைகளையும் இந்திய ராணுவம் குவித்து வருகிறது. அதிநவீன பீரங்கிகள், கனரக வாகனங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு, தயாராக உள்ளன.கடும் பனியிலும் சிறப்பாக செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ராணுவ தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன. லடாக் பகுதியில் ஓடும் இந்தஸ் நதியில் வெள்ளப்பெருக்கை தாண்டி செல்லவும், மற்ற தடைகளை கடக்கவும் வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ மேஜர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.