விமர்சனங்களை சந்திக்கிறது ஐ.நா சபை – பிரதமர் மோடி
ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு தொடங்கப்பட்டு இந்த ஆண்டோடு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு இன்று முதல் வரும் 29-ஆம் தேதி வரை ஐநா பொதுச்சபையில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவாத நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் பல்வேறு தலைவர்கள் காணொலி வாயிலாக உரை நிகழ்த்தி வருகின்றனர். இந்த வகையில், ஐநா சபையின் 75-ஆம் ஆண்டு விழாவில் இன்று பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிபர்களும், பிரதமர்களும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் உரை நிகழ்த்தினர். இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய இந்திய பிரதமர் நரேந்திரமோடி, ’விரிவான சீர்திருத்தங்கள் இன்றி ஐக்கிய நாடுகள் சபை விமர்சனங்களை எதிர்கொள்கின்றன. உலகம் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுள்ள இச்சூழலில் ஐக்கிய நாடுகள் அவையில் பன்முகத்தன்மை அவசியம்’ என்று தெரிவித்துள்ளார்.
காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் வேண்டும். காலத்துக்கு தொடர்பு இல்லாத கட்டமைப்புகளுடன் இன்றைய சவால்களை எதிர்த்துப் போராட முடியாது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.ஒன்றுக்கொன்று இணைந்த இன்றைய உலகில் யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையிலும், அனைத்து வகையானவர்களுக்கும் குரல் கொடுக்கும், சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் மனித நலனில் கவனம் செலுத்தும் பன்முகத்தன்மை உடைய சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. நமது உலகம் இன்று சிறப்பான நிலையில் இருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையே காரணம்” என்றார் பிரதமர் மோடி.